‘ஐங்கரன் இண்டர்நேஷனல்’ மற்றும் ‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் சார்பில், கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம், அன்பில் அவன். இதில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்க, 1980களில் நாயகியாக நடித்த ரேவதி, கதையின் மையப்புள்ளியாக நடித்துள்ளார். இவர்களுடன் சாபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியிருக்க, அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார். இசை, கோவிந்த் வசந்தா. ஒளிப்பதிவு, கௌதம் ராஜேந்திரன்.
அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் இருவரும் காதல் மணம் புரிந்து கொண்ட தம்பதிகள். இவர்கள் இருவருக்கும், ஒரு ‘ஹோம் ஸ்டே’ ஸ்டார்ட் அப் வணிகத்தை தொடங்க விருப்பபடுகிறார்கள். அதன்படி தமிழக கேரள எல்லை மலைப்பகுதியில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவை வாங்கி, சுற்றுலாத்துறை பதிவு மற்றும் தடையில்லா சான்றினை பெற முற்படும் போது பலவிதமான தடங்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியின் எம் எல் ஏ, இருவரையும் கொலை செய்யத் துடிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் ‘அன்பில் அவன்’ படத்தின் கதை.
அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட அந்நியோன்ய தம்பதிகளாக சிறப்பாக நடித்துள்ளனர். தங்களுக்குள்ளான காதல் நெருக்கத்திலும், சண்டையிலும் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு தத்ரூபமாகவே இருக்கிறது.

எம் எல் ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் பாலு, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகா டெல்லி கணேஷ், எம் எல் ஏ வின் அடியாளாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசமத் ஆகியோர் மிரட்டியிருக்கிறார்கள். மூவரும் மூன்றுவிதமான ஊனர்வுகளை வெளிப்படுத்தி கதையின் போக்கினை விறு விறுப்பாக கொண்டு செல்கின்றனர். இவர்களது அடியாள் கோஷ்டியினரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
மலைப்பகுதிகள் உடப்பட அனைத்து காட்சிகளையும் அழகுறவும், சண்டைக்காட்சிகளை ஆக்ரோஷமாகவும் படம்பிடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன்.
‘அன்பில் அவன்’ படத்தின் மிகப்பெரிய பலமே கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை தான். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, படம் பார்ப்பவர்களை ஒரு விதமான பதட்டத்துடனே வைத்திருக்கிறது, பின்னணி இசை. காதல் காட்சிகள், எமோஷனல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என எந்த காட்சிகளாக இருந்தாலும் அதற்கேற்ற பின்னணி இசை காட்சிகளை சிறப்பாக்கியிருக்கிறது.
படத்தின் பலவீனம் சண்டைக்காட்சிகள் தான். அதிலும் க்ளைமாக்ஸில் இடம் பெறும் நீண்ட… சண்டைக்காட்சி நம்பக மற்றத்தன்மையையும், எரிச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்தக்காட்சிக்கான செலவையும், அசோக் செல்வனின் 70 அடி உயர ஜம்பிங் காட்சிக்கான செலவையும் மிச்சப்படுத்தியிருந்தால் படத்தின் பட்ஜெட் வெகுவாக குறைந்திருக்கும்!
அன்பில் அவன் – ரசிக்கத் தகுந்தவன்!












