தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் என்கிற தொடர் கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் மற்ற நடிகைகளை பார்த்து சேரிப் பழக்கவழக்கம் என்று தலித் மக்களை இழிவுபடுத்தி பேசுகிறார் எனவும், ஓவியா உள்ளிட்ட நடிகைகள் ஆபாசமாக பேசியும், நடித்தும் வருகிறார்கள் எனவும் பரவலாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது. இநிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் இத் தொடர் கலாச்சார சீரழிவுக்கு வழி வகுப்பதாக கூறி கமல் உள்ளிட்ட நிகழ்ச்சி யாளர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்யவும்,பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இரவு நடிகர் கமல்ஹாசன் திடீரென பத்திரிகையாளர்களை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,”என்னை கைது செய்ய வேண்டும் என சொல்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும், என்னை சட்டம் பாதுகாக்கும் என நம்பிக்கை உள்ளது . இந்தி தெரியாமல் இருப்பதால் என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் இருந்திருக்கலாம். என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்து அளிக்க கடமைப்பட்டுள்ளேன். கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது. என்னையில் சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என்னுடைய ரசிகர்கள்தான். தசாவரதத்தின் போது என்னை கொண்டாடியவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள்.
சைவம் என்பதற்கு வேறு பொருள் இருந்தாலும் இங்கு மதத்தோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. தமிழில் மட்டுமே சைவத்திற்கு மதத்தினோடு தொடர்புடைய விளக்கம் சொல்லப்படுகிறது. பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையானதோ, அந்த அளவிற்கு பிக்பாசும் தேவையானது. காயத்ரி ரகுராம் பேசியது என்னுடைய திரைக்கதை என்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முத்தக் காட்சியால் சீரழியாத கலாசாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியால் சீரழிந்துவிடுமா? கேரளாவில்,நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.