தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட் ’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏஆர் ரஹ்மான்.


இப்படத்தை கனடாவில் ஒரு முறை ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. இத்தகைய சிறப்பைப் பெற்ற ஒன் ஹார்ட் படம் உலகமெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த ஒன்ஹார்ட் படத்தில் பதினாறு பாடல்கள் இருந்தாலும் தமிழ் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
சிறப்பம்சம்
இது அவருடைய ப்ரொபஷனல் பயோகிராபி என்று சொல்லலாம். இந்த படம் ரசிகர்களுக்கு அவரைப்பற்றிய புரிதலை புதிய கோணத்தில் அளிக்கும் என்று உறுதியாக சொல்லலாம். அவர் ஒரு இசைக்குறிப்பை எப்படி உருவாக்குகிறார்? அதனை ஏனைய இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார் ? அவர் தன்னுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை, அவர்களின் திறமையைக் கடந்து, எந்தவொரு தனித்துவமான பண்பின் அடிப்படையில் அல்லது எமோஷனல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பதையும் அவர் விளக்கி கூறும் போது புது அனுபவமாக இருக்கும்.
இதனை திரையரங்கத்தில் காணும் போது உங்களுக்கு சிரிக்கத்தோன்றும், அழத் தோன்றும். உணர்ச்சிமேலீடும். கோபம் வரும். பலவித உணர்வுகளின் கலவையாக இப்படம் இருக்கும்.

இப்படம் உலகம் முழுவதும் விரைவில் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. August 25 இப்படம் வெளியாகலாம் என்றும் தெரியவருகிறது.
நடிகர்கள்
ஏ ஆர் ரஹ்மானும் அவருடைய இசைக்குழுவினர் தான் இதன் நாயகர்கள் மற்றும் நடிகர்கள். இதில் அவருடன் பாடகர்கள் ஹரிசரண், ஜொனிதா காந்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்குபெற்றிருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு கலைஞரையும் அவர் ஏன் தேர்வு செய்தார்? அதன் பின்னணி என்ன? அவர்கள் மேடை நிகழ்ச்சியில் பங்குபெறும் போது அவர்களிடமிருந்து வெளிப்படும் திறமை என்ன?என பலவற்றை ஏ ஆர் ரஹ்மான் விவரிக்கும் போது சுவராஸ்யமாக இருக்கும். அவருடைய குழுவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கலைஞர்களும் முப்பது வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையினரே.
ரசிகர்களுக்கு..
இந்த படத்திற்குள் ஒரு கதைக்கான அனைத்து விசயங்களும் உள்ளன. நீங்கள் திரையரங்கத்திற்கு வந்து பாடல்களை மட்டும் கேட்கபோவதில்லை.இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். இதில் ‘இண்டிமேட் ’என்ற ஒரு புது விசயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதாவது மக்களில் ஒருவனாக தன்னை வைத்துக் கொண்டு, அவர்களுக்காக சிந்திப்பது. அதே போல் இவருடைய இசை நிகழ்ச்சியை ரசிக்கும் ரசிகர்களின் பரவச உணர்ச்சியும் இதில் இடம்பிடித்திருக்கிறது. இதில் மெலோடியான பாடல்களும் உண்டு. ராப் பாடல்களும் உண்டு. ஃபோக் பாடல்களும் உண்டு. ஒவ்வொரு பாடலின் பின்னணியில் அது உருவான கதையின் சுவராசியமும் உண்டு. இது ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த படம் பாமரன் முதல் படித்த மக்கள் வரை அனைவரும் கொண்டாடும் வகையிலான படம் என்பது மட்டும் உறுதி.