தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில்தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் தற்போது நேரடியாகவே தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து உள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டர் செய்தியில் கமல் ஹாசன் கூறியுள்ளதாவது,”ஒரு மாநிலத்தில் நடந்த துர்சம்பவத்துக்கும் ஊழலுக்கும் அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் எனக் கட்சிகள் கோருகிறது என்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என எந்தவொரு கட்சியினரும் கோராதது ஏன்? தமிழக முதல்வரின் ராஜினாமாவைக் கோரும் அளவுக்கு இங்கு குற்றங்கள் நடந்திருக்கின்றனவே?” என்னுடைய நோக்கமானது சிறந்த தமிழகமாகும். என்னுடைய குரலை வலுவாக்கும் தைரியம் யாருக்கு உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் செயலற்றவையாக இருந்தால் வேறு ஒன்றைத் தான் தேட வேண்டியவரும் என பதிவிட்டு உள்ளார். மற்றொரு டுவிட் செய்தியில், ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரை நாம் அடிமைகளே… புதிய சுதந்திர போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவு உள்ளவர்கள் வாருங்கள், வெல்வோம் என குறிப்பிட்டு உள்ளார். கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். முன்னதாக ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழப்புக்கு நடிகர் கமல் ஹாசன், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.