ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கடந்த டிசம்பர் 12ம் தேதி, ரஜினியின் பிறந்தநாளில் வெளியான படம் ‘ லிங்கா’. ஆனால்,படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, தயாரிப்பாளரிடமும், ரஜினியிடமும் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டனர். இதனை வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ் த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,சங்க தலைவர் கலைப்புலி தாணு, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, “‘லிங்கா’ படப்பிரச்சினையில் விநியோகஸ்தர்கள் பட வெளியீட்டிலிருந்து தொடர்ந்து ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கும், விநியோகஸ்தர்கள் போட்ட ஒப்பந்தத்தை மீறி பல்வேறு பிரச்சினைகள் செய்து வருகிறார்கள். கடந்த காலங்களில் ரஜினிகாந்த் நடித்த சுமார் 97 சதவீதம் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ‘லிங்கா’ படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து, அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து படத்தின் தயாரிப்பாளரையும், ரஜினிகாந்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவித்தது நமது தொழில் தர்மத்திற்கு மாறானது. மேலும் அது கண்டனத்திற்குரியது. திரையுலகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேவையற்ற முறையில் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது. எனவே உண்மையில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும். தவிர இதுபோன்ற சூழ்நிலையில் ஒற்றுமைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நமது திரையுலக்கிற்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும் ” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.