ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமல்ஹாசனை இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.டிவிட்டரில் நடிகர் கமல் தொடர்ந்து, அரசியல் கருத்துகளை தெரிவித்து வருவதோடு, அதிமுக ஆட்சி மீது, கமல் ஹாசன் வெளிப்படையான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசை பாராட்டியவர், கேரள முதல்வர் பினராய் விஜயனையும் நேரில் சென்று சந்தித்தார்.இந் நிலையில், கமல் ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் என்றும், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல் வெளிபடையாக தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்திற்கு வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார் . முன்னதாக மதியம் 1.30 மணியளவில் விமானத்தில் சென்னை வந்த கெஜ்ரிவாலை அக்சரா ஹாசன் வரவேற்று ஆழ்வார் பெட்டியில் உள்ள இல்லத்துக்கு அழைத்து வந்தார்.கெஜ்ரிவாலுடனான இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் முக்கிய அரசியல் விவகாரங்கள் தமிழக அரசியல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கெஜ்ரிவாலுக்கு கமல் வீட்டில் மதிய உணவு பரிமாறப்பட்டதாகவும் கூறபடுகிறது.