மோகன்ராஜா இயக்கத்தில்,சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் ஆகியோர் நடித்த வேலைக்காரன் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்ராஜா கூறுகையில், ‘1989ல் ஒரு தொட்டில் சபதம் படத்தில் இருந்து சினிமாவில் இருந்து வருகிறேன். நிறைய பேரிடம் ஆலோசித்து தான் படங்களை எடுத்து வருகிறேன்.பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம்.
சினிமா தரும் எண்டர்டெயின்மெண்டை விட நியூஸ் சேனல்கள் தரும் சமூக பிரச்சினைகள், அரசியல் அவலங்கள் போன்ற எண்டர்டெயின்மெண்ட் தான் இப்போது அதிகம். என்னை நம்பி கொடுத்த இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காக மட்டுமே படம் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. படத்தில் தப்ப யாரும் விரும்பி பண்றதில்ல, ஜெயிக்கறதுக்காக தான் பண்றாங்க, நன்மை ஜெயிக்கும்னு நிரூபிச்சா நன்மையை விரும்பி பண்ணுவாங்கனு ஒரு வசனம் இருக்கு. அது தான் உண்மை. ரீமேக் ராஜாவாக இருந்த நான் தனி ஒருவன் மூலம் தனித்த அடையாளம் பெற்றேன். சமூகத்தை பற்றி சிந்திக்கிற இயக்குனராக பார்க்கப்பட்டேன். தனி ஒருவன் கொடுத்த தைரியத்தால் வேலைக்காரன் படத்தில் சமூக பிரச்னையை கையில் எடுத்து அதில் ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறேன். ஒரு நல்ல மெசேஜை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறேன்.
இதை சொல்வதற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா என்று கேட்கலாம். வேறு வழியில்லை.சினிமாவில் மெசேஜ் கெட்டவார்த்தையாக பார்க்கப்படுகிறது. அய்யோ மெசேஜ் சொல்கிற படமா என்று பயந்து அனைவரும் ஒதுங்குகிறார்கள். அதனால் படம் சில பிரச்சினைகளை சந்தித்தது உண்மை. அதையும் தாண்டி நான் நினைத்த ஒரு சினிமாவை எடுத்திருக்கிறேன்.அடுத்த வாரம் படம் தியேட்டரில் இருக்காது, சீக்கிரம் பார்த்துவிடுங்கள் என்று ட்வீட் போடுகிறார்கள். அருவி ஒரு வாரம் தாங்கும். வேலைக்காரன் 2 அல்லது 3 வாரம் தாங்கும். இன்று சினிமாவின் வேகம் அப்படி உள்ளது.பொங்கலுக்கு புதுப்படங்கள் வரப்போகிறது. இதில் தமிழ் ராக்கர்ஸ், பல பிரச்சனைகளை தாண்டி வர வேண்டும். தமிழ் ராக்கர்ஸும் ஒரு நல்ல வேலைக்காரனாக இருந்தால் இந்த வேலைக்காரனை கொஞ்சம் தாமதாக ரிலீஸ் பண்ணச் சொல்லி கேட்டுக் கொள்கிறேன்.அவன் நல்ல வேலைக்காரன் தான். எனக்கு தெரிந்து அவனை விட சிறந்த வேலைக்காரன் வேறு யாரும் இல்லை. அவ்வளவு மூளைக்காரன். தமிழ் ராக்கர்ஸ் எத்தனை ராத்திரி, பகல் விழித்திருப்பான். எவ்வளவு வியர்வை சிந்தியிருப்பான் அவன். அந்த வியர்வைக்கு மரியாதை செய்து தான் நான் படம் பண்ணியிருக்கிறேன்.அந்த வியர்வைக்கு மரியாதை அளிப்பவனாக இருந்தால் இதை கூட கொஞ்சம் தாமதமாக ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.