Review
ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில், தங்கர் பச்சானின் ஒளிப்பதிவு, இயக்கத்தில், பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், இன்ப நிலா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. பரத்வாஜ் இசையமைக்க, வைரமுத்து -அறிவுமதி பாடல்களை எழுதியுள்ளனர்.
தன்னுடைய படைப்புகளில் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத பெருங்கலைஞன் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற பல படங்கள் சினிமாவை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் நிரந்தரமாய் தங்கிவிட்ட காவியங்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில், நிறை வேறாத காதலை எடுத்துச் சொல்ல வந்திருக்கும் காதல் இதிகாசமே ‘களவாடிய பொழுதுகள்’. தங்கர் பச்சானின் ‘சருகுகள்’ என்ற குறு நாவலின் விரிவாக்கம் தான் இந்தப்படம்.
அடிப்படை வசதிகளுக்காக அன்றாடும் அல்லாடும் ஏழை கார் டிரைவர் பொற்செழியன். தன்னுடைய மனைவி இன்பநிலா, குழந்தை யாழினி ஆகியோருடன் வாழ்ந்து வரும் நேர்மையாளர். எந்தப் பக்கம் திரும்பினாலும் தொழிற்சாலைகளும், சொத்துக்களையும் கொண்ட பெரும் பணக்காரர் சௌந்திரராஜன். ஒரு கார் விபத்தில் சிக்கி உயிருக்குப்போராடும் அவரை காப்பாற்றுகிறார் பொற்செழியன். உயிர் பிழைத்து சுய நினைவுக்கு வரும் சௌந்திரராஜன், பொற்செழியனை காண விரும்புகிறார். ஆனால் பொற்செழியன் தவிர்க்கிறார். ஏன் என்பது தான் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.
எந்தவிதமான பேதமுமின்றி பார்த்த மாத்திரத்திலேயே இதயத்தில் முளைத்து விடுகிற காதல் செடி, பின்னர் நிரந்தரமாக வளர்ந்து நிற்கும். அதை பிடுங்கும் போது ஏற்படும் ஒரு வலியிருக்கிறதே… அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும். அந்த வலியை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பூமிகா. காதலித்தவனுக்கும், கணவனுக்கும் இடையே சிக்கிய பூமிகா, இயல்பாக காட்டிக்கொண்டு ஆழ் மனதில் ஏற்படும் வலியையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி ஜெயந்தியாகவே வாழ்ந்துள்ளார்.
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு திரிந்த நடிகர் பிரபுதேவாவை ஒரு பண்பட்ட நடிகராக மாற்றியிருக்கிறார் தங்கர் பச்சான். தன்னுடைய நடிப்பின் மூலம் கண்ணியமிக்க பொற்செழியனை கண்முன்னே நிறுத்துகிறார் பிரபுதேவா. போனில் பேசும் காதலியின் குரலை அடையாளம் கண்டவுடன் ஜெயந்தி.. என மெலிதான குரலில் பிரபுதேவா கொடுக்கும் முகபாவனை ஒன்றே போதும் அவர் நடிப்பை வெளிப்படுத்த.
சௌந்திரராஜனாக வரும் பிரகாஷ்ராஜும் ஆர்பாட்டமில்லாத நடிப்பால் மனதில் நிற்கிறார். பொற்செழியன், ஜெயந்தி இவர்களுக்கிடையே இருந்த காதலையும், திருமணத்திற்கு பின்னர் நடந்த நிகழ்வுகளையும் எண்ணிப்பார்த்து க்ளைமாக்ஸில் பூமிகாவுடன் பேசும் காட்சி பெண்களின் மனதில் பிரகாஷ் ராஜை உயர்த்திப்பிடிக்கும். பெரிய விரிந்த விழிகளுடன் ‘1000 ரூபாயை பார்த்ததே கிடையாது..’ என சொல்லும் இன்பநிலாவும் இயல்பாகவே நடித்திருக்கிறார்.
ஆசை ஆசையாய் காதலித்தவர்கள் பிரிந்தபின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்ளும்போது முதலில் ஒரு சுகமான வலியாகத்தான் இருக்கும். பின்னர் அதுவே ஒரு பெருந்துன்பமாக மாறுவதும் உண்டு. காதலின் வலிமை, வலி, தாக்கம், துயரம், மகிழ்ச்சி என எல்லா உணர்வுகளையும் படம் முழுவதும் படரவிட்டிருக்கிறார் தங்கர் பச்சான்.
காதலில் கரம்பிடிக்காதவர்கள் திருமணமான பின்னர் சந்தித்துக்கொள்ளும் போது அப்பழுக்கில்லாத அவர்களது மனதில் கிளர்ந்தெழும் கிளர்ச்சியையும் வரம்பு மீறாமல் காட்சிப்படுத்தி, இரண்டு ஆண்களுக்கு நடுவில் திருமணமான ஒரு பெண்ணின் கண்ணியத்தை காப்பாற்றியிருக்கிறார் தங்கர் பச்சான்.
பெரும் தலைவர்களான பெரியார், ஜீவனந்தம் சம்பந்தப்பட்ட காட்சி, சாராயக்கடை ஒழிப்பு காட்சிகள் படத்திற்கு சம்பந்தமில்லாமல் வருகிறது. பின்னணி இசையால் ஒளிப்பதிவுக்கு ஓவியம் தீட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ். ‘சேரன் எங்கே’ பாடலில் வைரமுத்து நடப்பு சமூக அவல நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
‘களவாடிய பொழுதுகள்’ காதலர்களின் மனதில் களமாடும்! காதலர்கள் பார்க்கவேண்டிய ஒரு கண்ணியமான படம்.