தமிழக அரசு விதித்துள்ள 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய திரையரங்கு உரிமத்தை, 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றன.இவ் விவகாரம் தொடர்பாக கடந்த 20 ம் தேதி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழக முதல்வரை சந்தித்து,கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில், இன்று மாலை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிகாரிகளுடன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்ரமணியம், அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், ”எங்களுடைய கோரிக்கைகளில் எதெல்லாம் முடியுமோ, அதையெல்லாம்அ திகாரிகளுடன் கலந்து பேசி நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் நாளை முதல் எல்லா திரையரங்குகளும் இயங்கும். மேலும் வருகிற செவ்வாய் அல்லது புதன்கிழமை மறுபடியும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். தமிழ்ப் புத்தாண்டு முதல் நல்லது நடக்கும் என நம்புகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.