காதல் காட்சிகளை குறைத்துக் கொண்டு ‘ஆக்சன் சீன்’களுக்கு முக்கியம் கொடுக்கச் சொல்கிற காலம் இது.! அதிலும் கதைக்களம் மதுரையாக இருந்து விட்டால் வெட்டு, குத்து, வீச்சரிவாள் என கலவரமயமாக இருக்கும்.நெல்லையில் நடப்பதாக இருந்தால் அதற்கென தனி அருவாள்கள்!
கதாநாயகன்களுக்கு பெயரும் புகழும் வாங்கித்தருவது நடிப்பு மட்டுமல்ல. ஆக்சன் காட்சிகளும்தான்!
சொல்லித் தருவது மாஸ்டர்.அடி உதை ,காயம் படுவது ஸ்டண்ட்மேன்.
“சென்னையை சேர்ந்த இரண்டு பேர் கோமாவில் இருந்ததாக” கேரளத்தை சேர்ந்த பிரபல ஸ்டண்ட்மாஸ்டர் அஷ்ரப் சொல்கிறார்.
முப்பது ஆண்டுகளாக மாஸ்டராக இருந்துவரும் இவரது கதையே சோகம்தான்!மலையாளம் ,இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் 23 படத்துக்கு மாஸ்டர்.விரைவில் வரவிருப்பது ‘காயாங்குளம் கொச்சுன்னி’ ‘நீரவம்’.இரண்டும் பெரிய படம். இவரின் கதையை கேட்போம்.
“ஆறு வருஷங்களுக்கு முன்பு ஒரு டி.வி.சீரியலுக்கு மாஸ்டராக இருந்தேன், அப்ப என்னுடைய நாக்கில் வெள்ளையாக ஒரு தழும்பு மாதிரி தெரிந்தது. திடீர்னு ஒரு நாள் ரத்தம் வர ஆரம்பிச்சது.பயாப்சி பண்ணியதில் கேன்சர், செகன்ட் ஸ்டேஜ்னு சொன்னாங்க.சர்ஜரிதான் ஒரே வழி!
வேற என்ன பண்ண முடியும்?
ஆனா இண்டஸ்ட்ரியில் என்ன பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னா மாஸ்டருக்கு ஆக்சிடென்ட் ஆகிப் போச்சு! கை கால் விளங்காமப் போச்சு படுக்கையில் இருக்கார்னு சொல்றாங்க.வெறுத்துப் போயிட்டேன் சார்!
இறைவன் அருளால் பிழைத்து வந்து இப்ப பெரிய படங்கள் பண்றேன். பொதுவா சண்டைப்படங்களில் அடிபடுவது அபூர்வம். ஹீரோ அடிக்கிற மாதிரி பாவ்லா பண்ணுவார், எதிரில் இருக்கிற ஸ்டண்ட்மேன் கீழே விழுந்து காயம் பட்டது மாதிரி துடிப்பார்,எல்லாமே நடிப்புதான்!
ஆனால் மார்ஷியல் ஆர்ட் என்பது ஆபத்தானது. எச்சரிக்கையாக , கவனமாக இருக்கணும். ஒரு முறை என் மகனுக்கு தலையில் வாள் வெட்டு விழுந்து ஆறு தையல் போட வேண்டியதாகி விட்டது” என்கிறார்
” கேரளத்தில் தற்போது சிறந்த ஆக்சன் ஹீரோ யார்?”
“சந்தேகமே வேணாம் மோகன்லால்தான். அடுத்து பிருத்விராஜ். இப்ப வருகிற நடிகர்களில் சவுத் இந்தியாவின் ஜாக்கிஜான்னு சொல்ல முடியும்னா அது பிரணவ் தான்! மோகன்லாலின் பையன் ” என்கிறார்.