‘குட்டிப்புலி’ படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கியுள்ள புதிய படம் ‘கொம்பன்’. ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு தான் நடித்தது குறித்து நடிகர் கார்த்தி
பேசும்போது, ‘‘மெட்ராஸுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். குடும்ப சென்டிமென்ட் கலந்த படத்தில் நான் இதுவரை நடித்ததில்லை! அது எனக்கு ‘கொம்பன்’ மூலம் அமைந்துள்ளது. முதலில் இந்த கதையில் நடித்தால் ‘பருத்தி வீரன்’ சாயல் வந்துவிடுமோ என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆனால் முத்தையா முழு கதையையும் கூறி இந்த கேரக்டருக்கு ராஜ்கிரண் , அந்த கேரக்டருக்கு கோவை சரளா , இன்னொரு கேரக்டருக்கு தம்பி ராமையா… இப்படி ஓவ்வொரு கேரக்டரை பற்றியும், அதற்கான நடிகர், நடிகைகளை பற்றியும் கூறியபோது எனக்குள் பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. ராமநாதபுரம், விருதுநகர் மண் சார்ந்த இந்த கதையில் நடித்தது வித்தியாசமான அனுபவம் தான்! நான் எல்லா படங்களிலும் தண்ணி அடிக்கிற மாதிரியான கேரக்டர்களில் தான் நடித்திருக்கிறேன்! ஆனால் இப்படத்தில் தண்ணி அடிக்காத ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன்! அதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி தான்! இந்த படத்தின் கதை மட்டுமல்ல, பாடல்கள், சிச்சுவேஷன்ஸ் எல்லாமே யதார்த்தமாக இருக்கும். மண் சார்ந்த ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி இப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்துள்ளது’’ என்றார் கார்த்தி!