சினிமாவில் ஆர்வமுள்ள பலரிடம் ரூபாய் 75 லட்சம் நிதி திரட்டி , ‘கிரவுட் பண்டிங்’ என்கிற முறையில் கன்னடத்தில், ‘லூசியா’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார்.பவன்குமார்.இந்தப் படத்தின் வெற்றி, ஒட்டு மொத்த இந்திய திரையுலகயே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. அந்தரத்தில் கம்பி மீது நடப்பது போல் படத்தின் கதையும், திரைக்கதையும், இயக்கமும் அமைந்திருந்தது தான். அதே ‘லூசியா’வை இப்போது தமிழுக்காக ‘எனக்குள் ஒருவன்’ என்று தமிழாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் சிஷ்யர் பிரசாத் ராமர். திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்திருப்பவர் தயாரிப்பாளர் சி.வி.குமார் .இனி கதைக்கு வருவோம்!
திரையரங்கு ஒன்றில் வேலை பார்க்கும் இளைஞனாக விக்கி (சித்தார்த்). இவர் தினமும் தூக்கமின்மையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார். தன் தூக்கத்தையும், ஏக்கத்தையும் தேடி அலையும் இவருக்கு கிடைப்பது தான் ‘லூசியா ‘என்கிற மாத்திரை.இதை சாப்பிட்ட பிறகு விக்கி ,கனவு உலகத்திற்கு செல்ல, அங்கு அனைவரும் விரும்பும் பெரிய நட்சத்திர நாயகனாக வலம் வருகிறார் விக்னேஷ் (சித்தார்த்).
நிஜ வாழ்க்கையில் என்னென்ன கதாபாத்திரங்கள் வருகிறதோ, அதே கதாபாத்திரங்கள் கனவுலகிலும் வருகிறது. அது மட்டுமில்லாமல், இங்கு அவருக்கு நடக்கும் சம்பவங்கள் சிறிய மாறுதலுடன் அங்கும் அரங்கேறுகிறது. ஆனால், இரண்டிலும் ஒரே கரு காதல்.
இந்த இரண்டு கதைகளுக்கும் சம்பந்தமற்ற மூன்றாவது கதையும் உள்ளே நடக்கிறது. விக்னேஷ் என்னும் நடிகர் திடீரென கோமாவிற்கு போய் விடுகிறார். அவரது இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று புரியாமல் திகைக்கின்றனர் காவல் துறையினர்.ஆனால் இறுதியில் கனவுலகில் வாழ்ந்து வரும் நடிகர் விக்னேஷ் என்ற கதாபாத்திரமே உண்மை வாழ்க்கையில் ‘லூசியா ‘மருந்தின் காரணத்தால் விக்கி என்ற திரையரங்கில் வேலைபார்க்கும் கதாபாத்திரத்தில் கனவுலகில் வாழ்ந்து வந்த உண்மை தெரிகிறது.இறுதியில் விக்னேஷ் கோமாவில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை! ஹீரோ சித்தார்த் இரட்டை வேடங்களில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். இது போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கே முதலில் சித்தார்த்திற்கு மகுடம் சூடலாம்.தியேட்டரில் வேலை பார்க்கும் சித்தார்த் கேரக்டர் அனைவரையும் எளிதில் ஈர்க்கிறது . ஒருவர் தியேட்டரில் டார்ச் அடித்து படம் பார்க்க வருகிறவர்களை, இருக்கையில் அமர வைக்கும் வேலை செய்யும் சாதாரணமானவர். இன்னொருவர் விக்கி என்னும் முன்னணி கதாநாயக நடிகர்.படத்தின் கதாநாயகியாக வரும் தீபா சன்னதிக்கும் இரண்டு கேரக்டர்கள் தான். நன்றாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக வரும் சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து போகும் கேரக்டர் தான். நான்லீனியர் என்று சொல்ல ப்படும் வகையில் இரண்டு விதமான திரைக்கதை, ஒரு முடிச்சில் சந்திப்பது போல் இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இயக்குனருக்கு சபாஷ் போடலாம் என்றாலும் பல இடங்களில் திரைக்கதையை நகர்த்தி செல்ல படாதபாடு பட்டிருக்கிறார். நடிகர் விக்கியை ஒரு கும்பல் மிரட்டுவதாக காட்டுவதோடு சரி ,அவர்கள் யார் ? ஏன் மிரட்டுகிறார்கள் ! காரணம் சொல்லப்படவில்லை! போலீசார் விசாரிப்பதோடு அதோ கதி! சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்திற்கு மிகவும் உயிரோட்டமாக அமைந்துள்ளது . பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவிலும் ஒரு கதை கலர்புல் ஆனால், ஒரு நாயகனின் வாழ்க்கை இருட்டு, இன்னொரு கதையை கருப்பு வெள்ளையாக காட்டியுள்ளனர். இன்னொரு நாயகன் பணம், பங்களா என பணக்கார வாழ்க்கை வாழ்கிறான்.இவை இரண்டையும் தனித் தனி காட்சிகளாக்கி மிக வும் அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். நரேன் குணச்சித்திர நடிக ராக மிளிர்கிறார். சில இடங்களில் காட்சிகளில் குழப்பம் ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில், ‘ பி ‘அன்ட்’ சி’ என சொல்லக்கூடிய சாமனிய மனிதர்கள் இந்த கதையை புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகமே !