தொரட்டி படம் வழியாக தமிழுக்கு வந்திருக்கிறார் சமன் மித்ரு. ஒளிப்பதிவாளர்கள் நடிகர்களாக மாறுகிற காலம்.நட்டி நாயகனாக மாறினார்.இவரும் அவரது வழியில்!
எல்லாம் சரி, அதென்ன சமன் மித்ரு?
“சார், உங்களுக்கு ஒரு தகவல் சொல்றேன். எகிப்திய தலைமைப் பூசாரிதான் கடவுளுடன் நேரடியாக பேசுகிறவர் என்பது அந்த காலத்து எகிப்து மக்களின் நம்பிக்கை.அவருக்கு பேர் மித்ரு! சமன் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.அந்த பூசாரிக்கு சமம் என்று வைத்துக் கொள்ளலாம் அல்லவா?”
“பெயரைப்போலவே ‘தொரட்டி’யும் வித்தியாசமான பேர்தான்?”
“1960-ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை கொஞ்சம் மாத்தி பண்ணிருக்கோம். டைரக்டர் மாரிமுத்து சங்கரன் கோவில்காரர்.அவருக்கு கிடை போடுகிறவர்களின் வாழ்க்கை நல்லாத் தெரியும்! அதான் வசனம் ரொம்பவும் இயல்பாக வந்திருக்கு.அவர் டைரக்டர் பாக்யராஜ் சாரிடம் இருந்தவர்.”
“பொதுவா தயாரிப்பாளர்கள் குத்துப்பாட்டு,கவர்ச்சி இப்படித்தான் படம் எடுக்கிறார்கள். சமூகம் சார்ந்த கதை ரொம்பவும் கம்மி.?”
“எல்லோரையும் அப்படி சொல்ல முடியாது. நான் இன்ஸ்டிடியூட்டில் படிக்கிறபோது கோல்டு மெடல் வாங்கியவன்.எனக்குள்ள ஒரு ஏக்கம் இருக்கும்ல.அதுதான் இந்தப்படம்னு சொல்லலாம்.”
“அடுத்த படம் எப்படி இருக்கும்?”
” தொரட்டிக்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது, அடுத்து மனம் சார்ந்த, மண் சார்ந்த படமாக இருக்கும் ” என்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான சமன் மித்ரு.
பூசாரி குறி சொன்னா சரியாத்தான் இருக்கும்!