“தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை” என்பதாக எவர் சொன்னாலும் அவர் சொல்லில் சுத்தம் இல்லை என்பதுதான் உண்மை!
கலைஞரின் கடிதம் படித்தே அரசியல் கற்றவர்கள் உடன்பிறப்புகள். அவரது ஓய்வு உடன்பிறப்புகளுக்கு வெற்றிடம்தான்!
நூறு அடி தொலைவில் வரும்போதே பருத்த தொப்பை தரையைத் தழுவ அம்மாவுக்கு தெண்டனிட்டவர்கள் இரத்தத்தின் இரத்தங்கள்.அம்மாவின் இடத்தை அவர்களுக்குள் கூட்டணி அமைத்தும் நிரப்ப முடியவில்லை, கழுத்தின் மீது கத்தி.
எப்படி வெற்றிடம் இல்லாமல் போகும்?
தற்போது தமிழ்ச்சினிமாவில் நடக்கும் பந்தயமே அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் சூப்பர் ஸ்டாரா, உலகநாயகனா ,யார் என்பதில்தானே! இவர்கள் இருவரையும் விட அரசியலுக்கு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர் தளபதி விஜய்தான்!ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது படங்களைப் பற்றிய சிந்தனையில் தற்போது இருக்கிறார்.அவரது ரசிகர்களோ அடுத்துவரும் அவரது பிறந்தநாளை எப்படி அதிரடியாக கொண்டாடலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
“சும்மா கண்ஜாடை மட்டும் காட்டுனால் போதுங்க.எங்க மாஸ் என்ன என்பதை காட்டிடுவோம். ஆனால் அடக்கியே வெச்சிருக்கிறார்”என ஆதங்கப்படுகிறார் ரசிகர் மன்றத் தலைவர் ரவிராஜா.
ரஜினி,கமல்,விஜய் ஆகிய மூவரும் தங்களின் படங்களில் அரசியல் சார்ந்த வசனங்களை பேசி இருந்தாலும் தளபதியிடம் காரம் அதிகம் அடித்தது.. சர்வாதிகாரி ஜெயலலிதாவையே அதிரவைத்தது என்று சொல்லலாம். இதனாலேயே ஆளும் கட்சிகளாக திமுக,அதிமுக இரண்டும் அரியணையில் அமர்ந்திருந்த காலக்கட்டத்தில்அவர்களது கோபத்தை விழுங்க வேண்டியதாக இருந்தது. ஆனாலும் ரசிகர்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டார். இன்றளவும் சிறுவர்.சிறுமியர் ,இளையோர் என அத்தனை பட்டாளமும் தளபதியின் ரசிகர்களே!
விஜய்க்கு சமூகப்பார்வை,கவலை இல்லை என்பதாக சொன்னால் அவர்களை கருத்துக்குருடர்கள் என்று சொல்வது பிழை ஆகாது.
“எல்லோரும் நல்லா இருக்கனும்னுதான் நினைக்கிறோம்.ஆனா நாம்ப நல்லா இருக்கணும்னா விவசாயிகள் நல்லா இருக்கணும். அவங்க நல்லா இல்லியே! வல்லரசு ஆக வேண்டியதுதான்.ஆனா நல்லரசுதாங்க பெஸ்ட்” என்று விவசாயிகள் மத்தியில் கவலைப்பட்டது சமூக கருத்துதானே!
அதிக அளவில் கல்விப்பணி, நலத்திட்டங்கள் என செயல்பட்டவர் தளபதி விஜய்தான்! தேசியக் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சியின் தமிழக வளர்ச்சிக்காக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு பேசப்பட்டவர்களில் விஜய்யும் ஒருவர். மத்திய மாநில அரசுகளின் உளவுப்பார்வையில் இருக்கிறார்.
தற்போதைய நிலவரத்தைக் கவனித்தால் ரஜினி-கமல் இவர்களிடையில் நடக்கவிருக்கும் பலப்பரிட்சையை பார்க்கிற பார்வையாளராகவே விஜய் இருப்பார் என்றே தோணுகிறது. அரசியல் என்ட்ரிக்கான நேரம் இன்னும் வரவில்லை . மற்ற இருவரும் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டும் பட்சத்தில் திரை உலகில்தான் அவரது கவனம் இருக்கும்.
இரண்டு இடங்கள் வெற்றிடமாக இருக்குமே!