ஸ்டுடியோ கிரீன் ஞான வேல்ராஜா தயாரிப்பில் ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’ படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்தது. இநநிலையில் இப்படத்திற்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் நாடார் அமைப்புகளும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, ‘கொம்பன்’ ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் பட ரிலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, நீதிபதிகள் முன்னிலையில் படம் திரையிட்டு காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், திரையிடலின்போது வழக்கு தொடுத்தவர்கள் பிரச்சனை செய்து வெளியேற, அதனால் நீதிபதிகளுக்கு அவமரியாதை ஏற்பட்டது. இதனால் அதுகுறித்த அறிக்கையை அவர்கள் நீதிமன்றத்தில் சம்ர்ப்பித்துவிட்டனர். இதுகுறித்த தீர்ப்பு நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘கொம்பன்’ படத்திற்கு ஆதரவாக தமிழ்த்திரையுலகமும் களமிறங்கியது. தமிழ்சினிமாவின் பிரபலங்களான இயக்குனர் விக்ரமன், நடிகர் சரத்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் ‘கொம்பன்’ படம் இன்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு சற்று நேரத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து இவர்கள் பேசினார்கள். அப்போது அனைவருமே ‘கொம்பன் ஒரு குடும்பப் படம். இதில் சாதி சம்பந்தப்பட்ட எந்த கருத்தும், வசனமும் இடம்பெறவில்லை‘ என்பதை தெளிவுபட குறிப்பிட்டனர். அதோடு சென்சாரில் அனுமதி வாங்கிய ஒரு படத்தை இனிமேல் யார் எதிர்த்தாலும், ஒட்டுமொத்த திரையுலகமும் கைகோர்த்துப் போராடும், அதற்கு முன்னுதாரணமாகவே இந்த ‘கொம்பன்’ படத்திற்கு நாங்கள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளோம் என்றும் குறிப்பிட்டனர்.அதோடு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்த ‘கொம்பன்’ படத்தை ஒரு நாள் முன்கூட்டியே அதாவது நாளையே (ஏப்ரல் 1) வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா அறிவித்தார். இதற்கான முன்பதிவும் தற்போது ஆன்லைனில் தொடங்கிவிட்டது. ஒரு சில திரையரங்குகளில் காலை சிறப்புக்காட்சியும் இடம்பெறுகிறது.நாளையே வெளியாகிறது