எவன் சொன்னான் தமிழ்நாட்டில் எரிமலை இல்லை என்று?
சொன்னவன் வட பழனி வந்து பாரதிராஜாவின் பேச்சைக் கேட்டிருக்கவேண்டும்.அக்கினி நடசத்திரம் அவனருகில் நிற்பதுபோல் உருகி இருப்பான்!
“தீபக் மிஸ்ரா யாரு? நீ வைத்த ஆளு! எப்படி தீர்ப்பு இருக்கும்? காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் வரலேன்னு வையி! அறவழியில் போராடிப் பார்ப்போம்.சரி இல்லையானால் வேறு வழிதான்” என அனல் கக்கப்பேசுகிறார் பாரதிராஜா.
“காட்டுப்பயசார் இந்த காளி” என்கிற படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா கமலா தியேட்டரில் நடந்தது. இயக்குநர் யுரேகாவின் இயக்கத்தில் ஜெய்வந்த் தயாரித்து நடித்திருக்கும் படம். இயக்குநரும்,நாயகனும் தமிழ் மொழியின் முரட்டுப் பக்தர்கள். அரங்கத்தில் ‘காவிரி எங்கே’? என்பது போன்ற பதாதைகள் அங்கும் இங்குமாக ‘நடந்து’கொண்டிருந்தன. புதிய உத்தி! மேடை ஏறிய பிரபலங்களுக்கு பச்சை வண்ண சால்வை போர்த்தப் பட்டது . புத்தகமும் வழங்கப்பட்டது. இயக்குநர் யுரேகா,கதாநாயகன் ஜெய்வந்த் இருவரும் சிவப்புச்சட்டை அணிந்திருந்தனர்.
யுரேகாவின் பேச்சில் இன மான உணர்வின் வீச்சு பலமாகவே இருந்தது.
“காண்ட்ராக்ட் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கு வட மாநிலங்களில் இருந்து வேற்று மொழிக்காரர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள்.வந்தேறிகளால் தமிழ் கலாச்சாரம் கெடுகிறது.அவர்கள் தாராளமாக நடமாடுகிறார்கள். ஆனால் எனது உறவுகளான ஈழத்தமிழர்கள் ஆறு மணிக்குள் முகாமுக்கு திரும்பவேண்டுமாம். உத்தரவிடுகிறார்கள்.என்ன கொடுமையடா இது! வடநாட்டில் இருந்து வருகிறவர்களுக்கு உள்நாட்டு விசா வழங்கப்பட வேண்டும். காவிரிக்காக போராடுகிற விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும்” என்று அவரது கருத்தை அழுத்தமுடன் பதிவு செய்தார்.
கடைசியாக பேச வந்தார் பாரதிராஜா. அவரது மனதில் மையம் கொண்டிருந்த சுனாமி ஒரு சுழற்று சுழற்றி அடித்தது. அவரது பேச்சைக் கேட்பதற்காக வந்திருந்த மத்திய மாநில உளவுத் துறையினர் வழக்கம் போல பேச்சை பதிவு செய்தார்கள்.
“எனது மொழி,கலாச்சாரம் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்கமாட்டேன்.எனது கடைசி மூச்சு வரை போராடுவேன்” என தனது உரையைத் தொடங்கினார்.
“நான் அந்நியனாம். நீ அந்நியன் என்கிறபோது நான் உனக்கு அந்நியனாகத்தானே தெரிவேன்.!உனக்கு தமிழ் அந்நியமாகி விட்டது.” என்று தமிழக பிஜெபிக்காரர்களை ஒரு வாங்கு வாங்கினார்.
தனக்கு இப்படிப்பட்ட தலைப்பு வைப்பதில் உடன்பாடு இல்லை என்பதையும் சொல்லி நைசாக முரட்டுக்குத்துவை ஒரு பிடி பிடித்தார்.
“அங்கு குத்து இங்கு குத்து என்று என்னய்யா தலைப்பு வைக்கிறிங்க?” என கேட்டவர் அரசியலுக்கு வருகிற உச்சங்களை ஒரு பிடி பிடித்தார்.
“நாமே வசனம் எழுதி நடிப்பு சொல்லிக்கொடுத்து அப்படி பேசு இப்படி பேசு என சொல்லிக்கொடுத்து உச்சத்தில் ஏத்தி வைத்தால் நாட்டை ஆள வர்றோம்கிறான். கட் அவுட்டுக்கு பாலபிசேகம், மாலை போடுறது என்று மாக்சிமம் மக்களை முட்டாளாக்கிட்டோம்! சரி விடுங்க!
இப்ப பாலியல் வன்முறை கொடுமை அதிகமாக இருக்கு. இந்த ஆட்சி வந்த பிறகுதான் நிறைய நடக்கிறது. பாலியல் வன்முறை நாய்களை திருத்தவே முடியாது.
தெளிவாக அவன்தான் அந்த கொடுமையை செய்தான் என தெளிவாக தெரிகிறபோது என்ன விசாரணை? பீச்சில் ஆயிரம் பேருக்கு மத்தியில் நிக்க வைத்து சுட்டுக் கொல்லு! எட்டு வருஷம் கழிச்சு குற்றம் நிருபிக்கப்படவில்லை என சொல்லி விடுதலை பண்றதுக்கா விசாரணை?
நீதி மன்றங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது. ‘ஸ்கீம் ‘ என்பதற்காக வாய்தா. இவங்க ஆட்சி காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் வரும் என்கிற நம்பிக்கை இல்லை.வாரியம் வந்தாலும் நீர்த்துப் போய்விடும்! உச்சமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா யார்? நீங்க வைத்த ஆளுதானே! எப்படி தீர்ப்பு வரும்கிறது தெரியாதா? எங்களின் அறவழிப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்றால் வேறு வழியை தேடவேண்டியதுதான்.” என பேசினார் இயக்குநர் இமயம்.