இயக்குனர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சில சமயங்களில்’ இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்க சென்று சேரும் விதமான கதையை கொண்டிருப்பதால் இந்த பெரிய நிறுவனத்தை ஈர்த்திருக்கிறது. டிராமா வகையை சேர்ந்த இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் மற்றும் வருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் விஜயின் திங்க் பிக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார் டாக்டர் கணேஷ். இந்த படம் வரும் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.