வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஏழு முதியவர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே, மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையை ஒரு அதிர்ச்சியான சம்பவம் தலைகீழாக மாற்றிப் போடுகிறது.அந்த சம்பவத்திற்கும், முதியவர்களுக்கும் என்ன தொடர்பு? அந்த சம்பவம் யாரால் நிகழ்த்தப்படுகிறது?, அவர்களை இந்த முதியவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடனும், முடிச்சுகள் நிறைந்த திரைக்கதையுடனும் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவி.தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் அனுப் ஆகியோர் நடித்திருப்பது இப்படத்தின் முக்கியமான அம்சம்.இவர்களுடன் ரோஹித் என்னும் புதுமுக நாயகனும், லீமா மற்றும் ஈதன் ஆகிய இரண்டு கதாநாயகிகளும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் சமீபத்தில் கண் சிமிட்டல் மூலம் வைரலான பிரியா வாரியர் நடித்துள்ள “ஒரு அடார் லவ்” படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.அனிருத் விஜய் இசையமைத்துள்ளார்.
வழக்கமாக இளம் கதாநயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவமாக இருக்கும். அதே சமயத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.