தினமும் நாளிதழ்களில் வாசிக்கும் முக்கிய கிரிமினல் குற்றங்களை நினைவு படுத்திக் கொண்டு ஒழுங்கு படுத்தி இருக்கும் நிகழ்வுகள் தான் கதை..! உண்மைச் சம்பவங்கள் என்றாலும் அதில் கொஞ்சம் கைச்சரக்கை சேர்த்துக் கொள்ளவேண்டும். பக்குவம் சரியாக வரவில்லை என்றால் ஒட்டு மொத்த கதையும் படுத்து விடும். அறிமுக இயக்குநர் மு.மாறன் கதை எழுதுகிறவர். அதனால்தானோ என்னவோ பிரபல எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களை பரத், சுசீலா , கணேஷ் ஆகியோரின் பெயர்களையே அருள்நிதி, மகிமா,அஜ்மல் ஆகியோருக்கு வைத்திருக்கிறார்.
அளவுக்கு அதிகமான முடிச்சுகளைப் போட்டுவிட்டு ஒவ்வொன்றாக அவிழ்ப்பது இயக்குனருக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் கஷ்டம்தான்! பங்களாவில் நடக்கும் கொலையில் சம்பந்தமே இல்லாத கால் டாக்சி டிரைவர் அருள்நிதி மீது சந்தேகம். அந்த கொலை ஏன், எதற்காக நடந்தது, கொலையாளி யார் என்பதை அருள்நிதி கண்டு பிடிக்க ஒரு வழியில் சென்றால் அங்கும் அவருக்கு வலி!வழக்கமான பேஸ் புக் அடாவடி நட்பு, செல்போனில் ஒருவரது அந்தரங்க அரங்கேற்றம்.என சில பந்துகளில் சிக்சர்களை தூக்கி இருக்கலாம். எல்லாம் நோ பால்ஸ் ஆனால் அம்பயரை நொந்து என்ன பயன்?
வாட்டசாட்டமான அருள்நிதி-மகிமா காதல் இளசு. இன்னும் சற்று சீண்டல் ,சாடல் ,கூடல் என காட்சிகளை விரிவான தளத்துக்கு கொண்டு போயிருக்கலாம். வன்புணர்வுக் கொடுமதியாளனிடம் இருந்து மகிமாவை காப்பாற்றும் அஜ்மலுக்கு நல்ல தொடக்கம். இவரது கேரக்டரை இயக்குநர் அருமையாக கையாண்டு இருக்கிறார். ஆனால் அஜ்மல் இன்னமும் ஆர்.எஸ்.மனோகர் காலத்திலேயே இருக்கிறார்.
ஜான் விஜய்-சாயா சிங் கதையை கிளைக்கதையாக விரிவு படுத்தி இருக்கிறார்கள்.அருள்நிதி,மகிமாவை மறக்கச்செய்கிறது திரைக் கதை.
ஆனந்தராஜ் தனக்கான களம் இதுதான் என்பதை புரிந்து கொண்டு மற்றொரு பாதையில் பயணிப்பது கவனிக்க வைக்கிறது .கலகலப்பாகவும் இருக்கிறது.
ஒளிப்பதிவு அரவிந்த் சிங் . இருளின் அடர்த்தி மூச்சு முட்ட வைக்கிறது. அற்புதமான நெறியாள்கை.
அருள்நிதி – மகிமா இருவர்க்கும் வாழ்த்துகள். அவ்வளவே!