குரு.ஆய்த எழுத்து, ராவணன் ,கடல் என வரிசையாக அத்தனை படங்களும் அடிமேல் ,அடிவாங்க , எழுந்திரிக்க ஒரே வழி இளசுகளின் அலை பாயும் காதல் +காமம் என்ற சமாச்சாரம் தான் என ,மணிரத்னம் அவர்கள் பாணியிலேயே சொல்லி ,வெற்றியும் பெற்றுள்ள படம் தான் ஓ காதல் கண்மணி. 2000 -ல் வெளியான அலைபாயுதே பட பாணியிலேயே இளவட்டங்களின் நாடித்துடிப்புகளை துல்லியமாக கணித்து இப்படித் தாண்டா உங்களை அடிக்கணும் என்று சொல்லி அடித்துள்ளார். படம் நெடுக பொங்கி வழியும் இளமை. ஏற்கனவே தமிழகத்தின் மூளை முடுக்குகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வரும் ‘லிவிங் டு கெதர்’ அதாவது கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழ்வது என்ற புற்று நோயை விட பயங்கர நோய் இப்படத்திற்கு பிறகு அதி வேகமாக பரவும் ஆபத்தும் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேணும். இதில் இந்த அரசியல் வாதிகளின் தாலியறுப்பு சன்டை வேறு! வெளியூர்களுக்கு மகன்அல்லது மகளை படிக்க.அல்லது வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் வயித்தில் இனிமேல் நெருப்பை கட்டிக்கொண்டு தான் திரியனும்.
அனிமேஷன் படித்து அமெரிக்காவில் குடியேறத் துடிக்கும், 21 -ஆம் நூற்றாண்டு தமிழ் இளைஞன் (ஆதி )துல்கர்சல்மான்.பெரிய கட்டிடக்கலை நிபுணராக மாறி லண்டனில் குடியேற துடிக்கும்( தாரா) நித்யா மேனன். இவர்கள் இருவரும் மும்பையில் சந்திக்கின்றனர். கல்யாணம் மட்டும் கண்டிப்பாக பண்ணிக்கிறதில்லை, மற்றபடி படுக்கையை பகிர்ந்து கொள்வது முதல் எல்லாமே உண்டு! தாங்கள் நினைத்த இடத்தில் வேலை கிடைத்தவுடன் ஒன்றுமே நடக்காதது போல் அவரவர் சென்று விடுவோம் என்ற ஒப்பந்தப்படி சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது துல்கரின் உடன்பிறந்த அண்ணனின் முன்னாள் அலுவலக சீனியர் பிரகாஷ்ராஜ்- லீலா சாம்சன் தம்பதிகளின் வீடு.லிவிங் டுகெதருடன் அவர்களின் உறவு முடிந்தா? இல்லை கல்யாணம் என்ற கலாச்சாரத்தில் சங்கமித்ததா? என்பது தான் வயாகரா திரைக்கதை!
இன்றை இளைஞர்களின் உலகை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் துல்கர் சல்மானும், நித்யா மேனனும். மணிரத்னத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் இளமை உற்சாகம். ( தாரா: நீ என்னை என்ன செய்வே ? ஆதி: கட்டிப்பிடிப்பேன்…தாரா:அப்புறம்…ஆதி:முத்தம் தருவேன்…,தாரா:அப்புறம் ….ஆதி:கதவை தாழ்ப்பாள்போட்டு…..} திருமணத்தின் போது பரஸ்பரம் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சி போல் படம் நெடுக ‘கில்மா’ தூவல்கள்.காதலர்களின் பிரிவுக்கான கார ணம், மனம் மாறுவதற்கான சூழல் ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. இரண்டாம் பாதியில் படம் மந்தமாகிறது. காதலின் ஈரத்தையும் காதலுக்குள் முளைக்கும் சண்டையையும் சமாதானத்தையும் சொல்லும் காட்சிகள் கடைசிவரை திரும்பத் திரும்ப இடம்பெறுவதால் நமக்கு சலிப்பையே ஏற்படுத்து கிறது. ஊரி லிருந்து அண்ணன் குடும்பம் வரும் சமயத்தில் துல்கருக்கு ஏற்படும் பதற்றத்தை வைத்து நித்யா மேனன் விளையாடும் இடம் அழகு. பேருந்து, ரயில் பயணங்களில் பொங்கி வழியும் காதல் உணர்வுகளும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சின்னச் சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளன. வயதான மும்பைவாசியாக நினைவு தப்பிய மனைவி மீது பரிவையும், பாசத்தையும் கொட்டும் கணபதியாக பிரகாஷ்ராஜைத் தவிர வேறுயாரும் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்துவிட முடியும் என்று தோன்ற வில்லை!
ஆதி,தாராவுடன் தங்குவதற்கு வீடு தரமாட்டேன் என்று சொல்லும் பிரகாஷ்ராஜை, அவரது மனைவி லீலா சாம்சனுக்கு சங்கீதம் பிடிக்கும் என்ற வீக்னஸை வைத்து நித்யா மேனன் வீழ்த்தும் இடம் அசத்தல். கட்டிலையும் ஒன்றாக பகிர்ந்து கொள்ளும் துல்கருக்கு ஒரு கட்டத்தில் நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பாரோ என்ற சந்தேகம். சந்தேகம் தீர்கிறபோது சிரிப்பில் நிறைகிறது தியேட்டர்.துல்கர்சல்மான் ,படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விதமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய பாத்திரம் இவருக்குஎன்பதால் இவரது நடிப்பில் குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் பின்னணி இசை கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. லிவிங் டுகெதர் என்ற புதிய கலாச்சாரத்தை, மும்பையில் தான் நடக்கிறது என காட்சி படுத்தியிருப்பதும் முதிர்ந்த பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் தம்பதியின் இல்வாழ்க்கையை மேற்க்கோள் காட்டி , படத்தின் முடிவில் கலாச்சாரத்தை காப்பாற்றி தமிழக மக்களின் கல்லெறியிலிருந்து தப்பித்துள்ளார்.அதற்காக இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.