முனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவை பேய் படங்களின் மீது திருப்பி விட்ட ராகவா லாரான்ஸ். தொடர்ந்து காஞ்சனா, தற்போது காஞ்சனா -2 வரைக்கும் வந்துள்ளார்., பேய்.பிசாசு , பில்லி, சூனியம்,மீது தமிழக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தனக்கு சாதகமாக்கி கொள்வதில் சமர்த்தராக இருந்து வரும் ராகவா லாரன்ஸ், ஒரே மாதிரி கதையை , விறுவிறுப்பு திரைக்கதையா க்கி , படம் பார்ப்பவர்களை கடைசி காட்சி வரை சீட்டில் உட்காரவைத்து விடுகிறார் இரண்டு சேனல்களுக்கு இடையே டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதில் போட்டா போட்டி! முதல் இடத்தை பிடிக்கும் ஆசையில் , அந்த டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த, பேய் இருக்கா இல்லையா என்ற ரியாலிட்டி ஷோவைப் படமாக்க டம்மி ‘பேய் ‘செட்டப்புடன் மாமல்லபுரம் கடற்கரைச் சாலை பங்களாவுக்குப் போகிறது டாப்சி ,மற்றும் கேமிராமேனும்,பயந்தாக்கொள்ளியுமான ராகவா லாரன்ஸ் தலைமையிலான குழு. அங்கு ‘டம்மி’ பேயை படமாக்கும் போது, நிஜப் பேயே வந்துவிடுகிறது. அப்புறமென்ன !கிட்ட தட்ட 5 பேய்கள் கதாநாயகி டாப்சி மற்றும் கதாநாயகன் ராகவா ஆகியோரின் உடம்புகளில் புகுந்து விடுகிறது. இவர்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபடும் கோவை சரளா, ரேணுகா ஆகியோர் இருவரையும் ஒரு சர்ச்சுக்கு அழைத்துப் போய் பேயை விரட்ட ஏற்பாடு செய்கிறார். அங்கு பாதிரியார்கள் பேய் களை தங்களின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து பேய் களின் குலம் ,கோத்திரம் என விசாரிக்க,பாதிக்கப்பட்ட பேய்களின் ப்ளாஷ்பேக் விரிகிறது. அதில் ஒன்றல்ல, 5 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதையும் தெரிய வரு கிறது. அவர்களைக் கொடூரமாகக் கொன்றவர்களை பழிவாங்கவே இப்போது ராகவா, டாப்ஸி் உடம்புக்குள் பேய்கள் வந்திருப்பதாகவும், அதற்கு பாதிரியார் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் பேய்கள் கெஞ்சோ,கெஞ்சவேன கெஞ்ச, கருணையோடு பழிவாங்க பாதிரியாரும் அனுமதிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது தான் மீதிக் கதையாக்கப்பட்டுள்ளது. முந்தைய படமான காஞ்சனாவோடு ஒப்பிடுகையில், இதில் விறுவிறுப்பு, திடுக்கிடும் சமாச்சாரங்கள் கொஞ்சம் குறைவுதான். காரணம் எல்லாமே கொஞ்சம் ஓவர் டோஸ். பாடல்கள் படத்தின் ஓட்டத்தை தடுத்து விடுகின்றன. என்ன தான்செல்ல மகனாக இருந்தாலும் தன் தாயாரை (கோவை சரளா) ‘வாடி’ ‘போடி ‘என்று அழைப்பது ரொம்பவே ஓவர்!. பாத் ரூமுக்கு வாட்ச்மேன் வைக்கும் காட்சியும் அப்படியே! ஆனால் ராகவா, மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ் ஆகியோரின் இரட்டை அர்த்த வசனக்காட்சிகளை, பேமிலி ஆடியன்ஸை கருத்தில் கொண்டு தவிர்த்திருக்கலாம். படத்தின் முதல் பாதி காட்சிக்குக் காட்சி, திகிலும், பகீர் சிரிப்பும் வரிசை கட்டுகிறது. ஆனால், இரண்டாம்பாதியில் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் போரடிக்கத் துவங்குகிறது ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு, எஸ்.எஸ்.தமன், லியோன் ஜேம்ஸ், சி.சத்யா, அஸ்வமித்ரா…உள்ளிட்டவர்களின் இசை ஆகியவை மிரட்டல். பாட்டி, மொட்டை சிவா , திருநங்கை என அத்தனை கெட்டப்புகளுக்கும் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார் ராகவா லாரன்ஸ் . மாற்றுத் திறனாளியாக வந்து மனதை அள்ளுகிறார் நித்யா மேனன்.. இந்தப் படத்திலும். கோவை சரளா நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார் . காமெடியும், பயமும் நிறைந்த படத்தின் முதல் பாதி படத்திற்கு பலம்!.இழுவையான இரண்டாம்பாதி படத்திற்கு பலவீனம்! ஒரு பேயல்ல! ஐந்து பேய்களுக்காக ஒரு தடவை குட் டீஸ்களுடன் தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம்!
நடிப்பு: ராகவா லாரன்ஸ், டாப்சி, கோவை சரளா, நித்யா மேனன், ஜெய்ப்ரகாஷ், ஸ்ரீமன், மனோபாலா இசை: எஸ்எஸ் தமன், லியோன் ஜேம்ஸ், சி சத்யா, அஸ்வமித்ரா ஒளிப்பதிவு: ராஜவேல் ஒளிவீரன் எழுத்து, இயக்கம்: ராகவா லாரன்ஸ் .தயாரிப்பு: ஸ்ரீராகவேந்திரா புரொடக்சன்ஸ் .