காஞ்சு கிடக்கிற வயலுக்கு கருக்கருவாளுடன் எத்தனை பேர் போனாதான் என்ன..எதை அறுவடை பண்றது?
அஞ்சலி,சுனைனா,ஷில்பா மஞ்சுநாத்,அம்ரிதா என நான்கு கதாநாயகிகள். எதையும் சாதிக்க முடியல.!
விஜய் ஆண்டனி அமெரிக்காவில் மிகச்சிறந்த டாக்டர்.அவருடைய அம்மாவுக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர்.
” ஒரு கிட்னி நான் கொடுக்கிறேன்பா” என்று மகன் முன் வருகிற போதுதான் அப்பா அந்த சீக்ரெட்டை உடைக்கிறார்.
“எங்களுக்கு நீ சொந்த மகன் இல்லப்பா! எடுத்து வளர்த்த பிள்ள.” என்கிறார்.
” ஓ..அப்படியா,…அப்படின்னா என்னை பெத்த ஆத்தா அப்பன் யாருங்கிறத கண்டு பிடிக்கிறேன்” என்று தமிழ்நாட்டுக்கு வருகிறார் விஜய் ஆண்டனி.. அடிக்கடி அவரின் கனவில் வருகிற பாம்பு, மாடுக்கு என்ன அர்த்தம் என்பதை கண்டு பிடித்தாரா, தன்னுடைய பெற்றோர் யார் என்கிற தேடுதலுக்கு விடை தெரிந்ததா என்பதெல்லாம் பாலில் கலந்த தண்ணீரை பிரிக்கிற காரியம். ரொம்பவும் கஷ்டம்ங்க!
கதாசிரியர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.
பிளாஷ்பேக் காட்சிகளில் நாசர்,ஜெயபிரகாஷ், மதுசூதனராவ் ,கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடைய கேரக்டர்களுக்கு விஜய் ஆண்டனியை மாறுபட்ட மேக் அப் களில் துணிச்சலுடன் பயன்படுத்தி இருக்கிறார்.உத்தி நல்லாருக்கு.வி.ஆண்டனியும் வஞ்சகமில்லாமல் முயற்சி பண்ணி இருக்கிறார். இயல்பாக வந்து போய்க் கொண்டிருப்பவரை காதல் மன்னன் ஜெமினி கணேசனாக மாற்ற முடியுமா? லிப்-கிஸ் வேற.!
நாலு நாயகிகளில் அஞ்சலி பரவாயில்லை.
கழுத்தில் கிடந்த தாலி காணாமல் போனது ஷில்பாவுக்கும் தெரியல ,வில்லாதி வில்லன் வேல ராமமூர்த்திக்கும் தெரியல.
படத்தில் ஆறுதல் யோகி பாபு.
பின்னணி இசை, விஜய் ஆண்டனியின் பெஸ்ட்.
ரிச்சர்டு கேமரா அழகு.
மற்றபடி காளி பூஜை எந்தளவுக்கு தயாரிப்பாளருக்கு கை கொடுக்கும் என்பது தியேட்டர்களைப் பார்த்தால் தெரிந்து விடும். கஷ்டம்தான்!