நடிகையர் திலகம் படம் பார்த்த பின்னர் எத்தனையோ நிகழ்வுகள் நினைவுக் கட்டு உடைத்து வெளியேறத் துடித்தன.
விருத்தனாக வந்தாலும் இளமைக் குறும்பு சற்றும் குறையாத வாலிப வயோதிகர்தான் ஜெமினி கணேசன் அவர் ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’யில் நடித்து வந்த காலக்கட்டத்தில்…..
ஏவி.எம் படப்பிடிப்புத்தளம்.
இயக்குனர் ராம.நாராயணன், ஏவி,எம்,புரொடக்சன்ஸ் தயாரிப்பு.
இளைய திலகம் பிரபு,சிலுக்கு ஸ்மிதா, காதல் மன்னன் ஜெமினி கணேசன் முக்கிய வேடங்களில்.!
இடைவேளை வந்தது. கம்பெனி விருந்து.
ஜெமினி,பிரமிளா ,மற்றும் செய்தியாளர்களுடன் நானும்.
பேசிக்கொண்டே ‘நான்-வெஜ் ‘அயிட்டங்களை ருசித்த நேரம்.
“நீ என்கூட பழகிப் பார்த்திருக்கியா கண்ணு ?”
பிரமீளாவிடம் கேட்கிறார் ஜெமினி.
“அப்படின்னா?”
“என்னடி பச்சக் கொழந்தையாட்டம் கேக்கறே? என்னை உனக்கு பிடிக்கிறதா,,,வயசாயிடுச்சுன்னு பார்க்காதே!”
புரிந்து விட்டது பிரமிளாவுக்கு! “சார் நீங்க ஊமக்குசும்பன் சார்!”
இப்படி ஜாலியாக முடிந்தது மதிய உணவு நேரம். ஜெமினிக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தும் திரைப்பட பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் அரட்டை அடிக்க வேண்டும் என்பதில் அந்தக் காலத்து கதாநாயகர்களுக்கு மிகுந்த விருப்பம் இருந்தது.இந்த காலத்தில் சத்தியமாக அது சாத்தியமில்லை.
காதல் மன்னராக இருந்தும் எண்ணிக்கை மூன்றைத் தாண்டவில்லை.
அவரை சாவித்திரி வீட்டை விட்டு துரத்திய போது மனிதர் உடைந்து விட்டார்.அந்த நிகழ்வுகள் …மிகுந்த சோகம்!
“நான் உயிருக்கும் மேலாக காதலித்து மணமும் புரிந்து கொண்டவள் சாவித்திரி.அவளுடன் கூட இருந்தவர்கள் அவளை சொந்தமாக படம் எடுக்கத் தூண்டினர்.
‘வேண்டாம் ‘ என எச்சரிக்கை உணர்வுடன் அவளை தடுத்தேன். தடையாக இருக்கிறேன் என்று என்னையே அவள் தூக்கி எறிய முற்பட்டாள்.நல்ல வழியை எடுத்துச்சொல்லி எச்சரித்த என்னை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னபோது துடித்துப்போனேன்.
நான் வெளியேறியபோது அவளிடம்” முதலில் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியேறுவா..அப்புறம் லட்சுமி போயிடுவா!அப்புறம் சக்தி போயிடும். பிறகு நீ ரொம்பவும் கஷ்டப்படுவே ” என்று எச்சரித்து விட்டுத்தான் வெளியேறினேன்.
நான் சொன்னதுபோல ஒன்றன்பின் ஒன்றாக அவளை விட்டுப் போகத்தான் செய்தது.
பிராப்தம் சிவாஜி கணேசனோடு அவள் சேர்ந்து நடித்த படம். தோல்வி கண்டது.
மாளிகை மாதிரி இருந்த வீடு,நிலம் எல்லாவற்றையும் இழந்து உடல் நலமும் கெட்டு நோய் வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தாள்.
நடப்பதைப் பார்த்து நான் மனதுக்குள் வேதனைப்பட முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியல.
அவளால் காப்பாற்றிக்கொள்ள முடியாத சொத்துகளை நான் காப்பாற்ற எனக்குத் துடுப்பு போல் கிடைத்தது எனது குழந்தைகள்தான்!மைனராக இருந்த குழந்தைகள் பெயரில் இருந்த ஒரு சில சொத்துகளை கடனில் மூழ்காமல் அவர்களுக்குக் காப்பாற்றிக்கொடுக்க என்னால் முடிந்தது.” என்று காதல் மன்னன் சொன்னதில் ஒரு பிழையும் இல்லை!
ஜெமினியின் ஏழு மகளும் சங்கீத ஸ்வரங்கள்தான்