கல்யாண வீட்டில் கை நனைக்கும் வேளையில்” பாயாசத்தில் பாலிடாலை கலந்துட்டாய்ங்கய்யா “. என்று யாராவது குரல் விட்டால் எப்படி இருக்கும்?
அப்படி ஆகி விட்டது,’செம’ படத்தின் முன்னோட்ட விழா, தயாரிப்பாளர் வசனகர்த்தா, பாண்டிராஜ் ,கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் , இருவரது முகத்திலும் எதையோ இழந்த சோகம். தொகுப்பாளரின் அழைப்பு இல்லாமலேயே அனைவரும் மேடை ஏறினார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நூறாவது நாள் போராட்டத்தில் அப்பாவித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தி அவர்களது இதயத்தில் தடதடத்ததின் விளைவுதான் முகத்தின் சுருக்கம்.
ஒரு ஜாலியான படம் என்பதை முன்னோட்டக் காட்சிகளும்,பாடல் காட்சியும் உணர்த்தினாலும் அதை படைத்தவர்களின் அகத்தில் தர்மசங்கடம். இனம் சார்ந்த கவலை அக்கறை என சொல்லலாம்.
கலகலப்பாக பேசக்கூடிய பாண்டிராஜ் முதலில் கவலையை பகிர்ந்து விட்டு பின்னர் படத்தைப்பற்றி பேசினார்.
“ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தைப் பற்றிய செய்தி மிகவும் கஷ்டத்தை கொடுத்திருக்கிறது. மயிரை எடுப்பதற்குக்கூட எவனுக்கும் உரிமை இல்லை. உயிரை எடுக்கிறது எவ்வளவு கொடுமை?மக்கள் கோபம் எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது தெரியவில்லை.
அரசு முடிவு தப்பானது.
எங்கே போகுது தமிழ்நாடு?
ஆண்டவனுக்கும் தெரியாது” என்று சொல்லிவிட்டு கதையின் மையக்கருவை விளக்கினார். “குடும்பத்துடன் பார்க்க வேண்டிய டீசன்டான படம். டபிள் மீனிங் டயலாக் கிடையாது ” என்பதை அழுத்தமுடன் சொன்னார். இருட்டு அறை குத்து எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.
ஜி.வி .பிரகாஷ் பேசுகையில் “உரிமைகளுக்காக போராடுகிறபோது உயிரை எடுப்பது கேவலமாக இல்லையா? இங்கு வரும்வரை சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு பேர் என சொன்னார்கள். இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்கிற அச்சம் இருக்கிறது.பயங்கரமாக கோபம் வருகிறது. உயிர் எடுக்கும் அதிகாரத்தை உரிமையை யார் கொடுத்தது?” என்று கேட்டார்.
தொடக்கத்தில் அப்பாவித் தமிழர்களுக்காக ஒரு நிமிடம் அமைதி அனுசரிக்கப்பட்டது.
இந்திய எல்லையில் நித்தமும் பலி கொடுக்கும் இந்திய அரசு உள்நாட்டிலும் காவு வாங்கத் தொடங்கி இருக்கிறது.