பட்டாசு வெடிப்பதைப்போல மக்கள் மீது துப்பாக்கி ரவைகளை சுட்டுத்தள்ளி டஜன் உயிர்களை சாப்பிட்ட தமிழக அரசு தற்போது தமிழக சினிமா நடிகர்கள் மீது காண்டில் இருக்கிறது. அசல் தமிழ் நடிகர்கள், நகல் தமிழ் நடிகர்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லோருமே தமிழக அரசை காய்ச்சி எடுத்து விட்டார்கள். அதனால் அரசுக்கு வந்திருக்கிறது பெருங்கோபம்.
தமிழக அரசின் கடுப்பான்கள் பட்டியலில் அடிஷனலாக சேர்ந்திருப்பவர் கார்த்தி.
“சுற்றுச் சூழலைக் காக்க உயிரை விட்ட அத்தனை பேரையும் ,அவர்களின் தியாகத்தையும், நாளைய வரலாறு கல்வெட்டுக்களாக நினைவில் வைத்திருக்கும்.”என்று உண்மையைக் கொட்டியவர் இன்னும் சொல்கிறார்.
“அதே நேரம் நல்ல மூச்சுக்காற்றுக்காகவே போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்திவிட்ட கோரத்தையும் மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். மறக்க மாட்டார்கள். அதற்கு அரசே பொறுப்பு!
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு உடனடியாக உத்திரவிடவேண்டும்.போராடுவது மக்களின் அடிப்படை உரிமை. அதனை அடக்கவும் ஒடுக்கவும் காட்டுகிற அக்கறையை அதற்கான தீர்வுக்கு இனியாவது காட்டவேண்டும்.போராட்ட களத்துக்கு மக்கள் வரக்கூடாது என அரசு நினைப்பது தவறு.அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிற அராஜகப் போக்கை அரசு ஒரு போதும் செய்யக்கூடாது” என்று கார்த்தி கூறி இருக்கிறார்.