சமுதாயம் மனிதனை காயப்படுத்தும்,கடிக்கும்.ஆனால் ஒரு போதும் தன் மீது காயம் படக்கூட அனுமதிப்பதில்லை. தப்பித்து ஓடி விடும். அது அழுவதில்லை.ஆனால் ஆனந்தப்படுத்தி அழ வைத்து விடும்.
அனு ( பியா ) சமூக நலம் நாடுகிறவள். பேஸ்புக் விரும்பி. இவளது நட்பு கிடைக்கப்பெற்ற அபிமன்யூ(டொவினோ தாமஸ் ) அவளை விரும்புகிறான் .அதாவது காதலிக்கிறான்.
“என்னடா காதல்? செக்ஸ்தானே?” என்கிற அபியிடம் “ஆமாடி! கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கல்லாம் என்ன காவியமா படிக்கிறாங்க?”என்கிற அபி ஒரு கட்டத்தில் பெற்றோருக்கு சொல்லாமலேயே அவளை கல்யாணம் செய்து கொள்கிறான். ஆங்கிலப்படங்களில் பார்ப்பதைப்போல் உதடுகள் கடித்து உடல் கசங்கி உறவுகள்.அவளின்றி அவனில்லை.அவனின்றி அவள் இல்லை.
வாழ்க்கை இனிமையாக ,அழகாக விரைவாக ஓடுகிறது. அவள் கர்ப்பிணி?
இதன் பிறகுதான் அவர்களுக்கு இடையில் கடும்பிளவு! அவர்களை இந்த சமுதாயம் ஏற்குமா என்கிற அச்சம்! காரணம் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் .இது எப்படி நிகழ்ந்தது ?
இயக்குநர் பி.ஆர்.விஜயலட்சுமி துணிந்து இயக்கி இருக்கிறார். பிரபு,சுகாசினி,ரோகினி என அத்தனை கேரக்டர்களுமே இயல்புடன் கடக்கிறார்கள். “எங்கடா போன?” என்கிற பாடல் வேறு நம்மை எப்படியெல்லாமோ கேட்கிறது. கார்க்கியின் வரிகள் காதலாகவும் கனலாகவும் சுடுகிறது.இதம், “ஊமை நெஞ்சின் ஓசைகள்” என்கிற ஆனந்தகும்மிப் படப்பாடல் வரிகளை விட அழுத்தம்தான்!
மலையாள வாடை என்றாலும் அதிலும் ஒரு சுகம்.!
ஆனால் இந்த படத்தை ரசிகர்கள் என்கிற இனம் ஏற்குமா?
படைப்பாளிதான் பதில் சொல்லவேண்டும்!
“என்னடா எடுத்திருக்காய்ங்க” என ஒற்றை வரியில் கடந்து போகும்!