அக்கினி நட்சத்திர வெயிலை அளப்பதற்கு அளவீடு இருக்கிறது. மனிதனின் கோபத்தை அளப்பதற்கு அளவீடு இருந்தால் மக்கள் செல்வன் விஜயசேதுபதியிடம் கொண்டு செல்லுங்கள் ,நெற்றிக்கண் திறக்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு பற்றி பெரும் கோபத்தில் இருக்கிறார் இந்த கோடம்பாக்கத்துக்காரர்,
“எங்களை வாழவிடுங்கள் என்பதுதானே போராட்டத்துக்கான காரணம்.ஸ்டெர்லைட் ஆலையால் அழியிறோம்.எங்களின் சந்ததியும் அழிஞ்சிடுமோன்னு பயம். தண்ணி கெட்டுப்போச்சு,காத்து கெட்டுப் போச்சு.
ஆலை இருக்கட்டும்னு சொல்ற எல்லோரும் உங்க புள்ளை குட்டிங்களோடு வந்து எங்க வீடுகளுக்கு வாங்க. தண்ணிய குடிங்க ,காத்தை சுவாசிங்க. இதெல்லாம் பண்ணிட்டு எங்க போராட்டத்தை தப்புன்னு சொல்லுங்க.!
எங்களின் அடிப்படை உரிமைகளான தண்ணீர் காற்று எல்லாத்தையும் அழிச்சிட்டு .சீரழிச்சிட்டு சும்மா அமைதியா இருங்கன்னு சொன்ன எப்படிங்க சும்மா இருக்க முடியும்?துப்பாக்கி சூடு மாதிரி பெரிய முடிவுகளை எடுக்கும்போது அதை முன்னாடியே ஏன் சொல்லல?
திடீர்னு துப்பாக்கிச் சூடு நடத்தினது ஏற்கனவே முடிவு பண்ணப்பட்டதோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு .ஆனா ஒண்ணு இதை யாரெல்லாம் பண்ணினாங்களோ அவங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு!” என்று விகடன் வார இதழில் கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.