‘ஊருக்கு இளைத்தவன் பேனா பிடிக்கிறவன்தான் ‘என்று எவனாவது எழுதி,கிழிதி வைத்தானோ என்னவோ, நாலாவது எஸ்டேட் என்று போற்றப்படும் பிரஸ்காரர்களை காவலர்களும் சமயங்களில் அரசியல்வாதிகளும் பின்னி பெடல் எடுத்து விடுவார்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால் காவலர்கள் நாலு தட்டு தட்டுவார்கள்.
தூத்துக்குடி போய் திரும்பிய ரஜினியை “நீங்க யாருங்க?” என்று ஒருவர் கேட்ட கேள்வி சரியாக அசைத்துப்பார்த்திருக்கிறது. ஒரு வினாடியில் உயரம் சாணுக்கும் குறைந்து போனது.
“சூப்பர் ஸ்டார் யார்னு கேட்டால் சின்ன பிள்ளையும் சொல்லும்” என்கிற வரிகளை தூத்துக்குடியில் கிழித்துப்போட்டுவிட்டார்கள். அதுதான் சென்னை விமான நிலையத்தில் ரஜினியை சீற வைத்திருக்கிறது.
‘யே யார்யா’என ஒருமையில் கேட்டுவிட்டு வேற கேள்வி இருக்கா என்று கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் ரஜினி.
இதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கடும்கண்டனத்தை பதிவு செய்தது.
இதற்கு ரஜினி மன்னிப்பு கேட்டிருக்கிறார். “நான் மிரட்டல் தொனியில் ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்கள் மனதாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று டுவிட்டரில் சொல்லி இருக்கிறார்.