சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாட்கள் முழுவதும் நரகம் தான் என்கிற கருவே படத்தின் திரைகதையாக்கப்பட்டுள்ளது. கமல் ஹாசன் ( மனோரஞ்சன் )ஒரு சூப்பர்ஸ்டார் நடிகர். இவர் தனது மனைவி ஊர்வசி, மகன் மற்றும் மாமனாரும், பெரிய படத் தயாரிப்பாளருமான (பூர்ணசந்திர ராவ்)விஸ்வநாத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கமலின் குடும்ப டாக்டர் ஆண்ட்ரியா. இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் வேறு! கமல் தனக்கு அவ்வப்போது வரும் தலைவலிக்காக யாருக்கும் தெரியாமல் மது அருந்துவதும் வாடிக்கை. இந்நிலையில், கமல் நடித்த ஒரு படத்தின் வெற்றிவிழா பார்ட்டியில் தன் குடும்பத்தினருடன் கமல் கலந்து கொள்கிறார்.
அப்போது, அங்கு வரும் ஜெயராம், கமலை தனியாக சந்தித்து அவருக்கு ஒரு பெண் இருப்பதாக வும், தன்னை தொடர்புகொள்ளுமாறு விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு வேக வேகமாக சென்று விடுகிறார்.
அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கும் கமலஹாசன், தனது மேனேஜர் சொக்குவிடம் (எம்.எஸ்.பாஸ்கர் ) கூறி ,விசாரிக்க சொல்கிறார். ஆனால், அதற்குள் கமலே , ஜெயராமை தேடிச் சென்று சந்திக்கிறார். அப்போது, கமலுக்கு அவரை ச் சுற்றி நடந்த, தெரிய வராத ரகசியத்தை சொல்லிவிடுகிறார். கமலின் முன்னாள் காதலி குறித்தும் , கர்ப்பமுற்ற அப் பெண்ணின் கருவை கலைக்க இவரது மாமாவான விஸ்வநாத் பணம் கொடுத்ததையும், அந்த பெண் அதை வாங்க மறுத்து, அந்த கருவுடனேயே கமலை விட்டு பிரிந்து சென்றதையும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார்.
அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைதான் ( மனோ) பார்வதி . அவள் தற்போது கல்லூரியில் படித்து வருவதாக கமலிடம் கூறும் ஜெயராம், நடந்த உண்மை தெரியாத அவள் ‘அவள் உங்களை துரோகியாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்கிறார். தன் தவறை உணர்ந்த கமல், அவளை பார்க்கத் துடிக்கிறார். மகள் பார்வதியை சந்திக்கும் கமல் திடீரென மயங்கி சாய,
கமலின் மூளையில் ஒரு கட்டி இருப்பதாகவும், நீண்ட நாளைக்கு உயிரோடு இருக்கமாட்டார் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனவேதனையடையும் கமல், தான் ஒரு நடிகர் என்பதால், தான் இறப்பதற்குள் தன்னுடைய குருநாதர் மார்க்க தரசி (கே.பாலசந்தர்) இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட தீர்மானிக்கிறார்.
இதற்காக தனது குருநாதர் கே.பாலச்சந்தரிடம் சென்று ‘உங்களையும் என்னையும் இந்த மக்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும்’ என்று கேட்கிறார். ஏற்கெனவே, கமல் மீதும், அவரது மாமனார் விஸ்வநாத் மீதும் மனஸ்தாபத்தில் இருக்கும் கே.பாலச்சந்தர் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். தன்னுடைய கதையை கேட்டுவிட்டு பின்னர் உங்கள் முடிவை தெரிவிக்குமாறு கமல் கூற, அவரும் வேண்டா விருப்பாக கதையை கேட்கத் தொடங்குகிறார். இறுதியில், அந்த கதை கமலுடைய நிஜவாழ்வில் நடந்த கதை என்பது தெரிந்ததும் உருகி தவிக்கும் மார்கத ரசி கமலை வைத்து ‘உத்தமவில்லன்’ என்ற படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார்.கமல்-கே.பாலச்சந்தர் மீண்டும் இணைந்தது கமலுடைய குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. கமலுக்கும் அவரது மாமனாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.இதில், கமல் தன் மாமனாரை கோபத்தில் திட்ட, இதனால் கமலுடைய மனைவி ஊர்வசி தனது மகன் மற்றும் அப்பாவுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.இருப்பினும், தன்னுடைய லட்சியத்தில் விடாப்பிடியாக இருக்கும் கமல், இதையெல்லாம் தாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில், கமல் அந்த படத்தை திட்டமிட்டபடி முடித்தாரா? அவருக்கு வந்த பிரெய்ன் ட்யூமர் வியாதி குணமானதா! பிரிந்துபோன இவர் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை. படைப்பாளிகள் இறந்துவிட்டாலும், அவர்களுடைய படைப்புகளும், புகழும் என்றும் மறைவதில்லை என்பதை இப்படத்தில் அழகாக பதிவு செய்திருக்கிறார்.
கமல் ஒரு மகா கலைஞன் என்பதை மறுபடியும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். நடனத்தில் இன்றைய இளம் நடிகர்களுக்கு சவால் விட்டிருக்கிறார்.ஒவ்வொரு காட்சியிலும், அதற்கேற்ற முகபாவனை, வசன உச்சரிப்பு, நக்கல், நையாண்டி என அனைத்தையும் கச்சிதமாக செய்து அசத்தியிருக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளில் அவருக்கே உரித்த அழுத்தமான நடிப்பு அற்புதமாக வெளிபடுத்தியிருக்கிறார். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்பதைப்போல மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரை மிக அருமையாக நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.கமல். பாலசந்தர் சில காட்சிகளே வந்தாலும் அற்புதமான நடிப்பு. இவருடைய கோபம் கலந்த வசனங்கள் தியேட்டரையே அதிரவைக்கிறது. அதேபோல், கமலின் மாமனாராக வரும் கே.விஸ்வநாத்தும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அழகாக நடித்திருக்கிறார்.இரண்டாம் பாதியில் வரும் பூஜாகுமார் ,அவருடைய பகுதியை சிறப்பாகவே செய்திருக்கிறார். நடனக் காட்சிகளில் அழகு மிளிர்கிறது. ஆண்ட்ரியாவுக்கும் இந்த படத்தில் சில காட்சிகள்தான். அதேபோல், கமலின் மனைவியாக வரும் ஊர்வசி, அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் பளிச்சிடுகிறார். கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படத்தில் ரொம்பவும் வலிமையான கதாபாத்திரம். . சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். நாசர்,
இயக்குனர் ரமேஷ் அரவிந்த், மருத்துவராக வரும் ஆன்ட்ரியா, அந்த மெச்சுரிட்டியை விட்டுக் கொடுக்காமலும், அதே நேரத்தில் கமலுக்கு தன்னையே விட்டுக் கொடுத்தும் வாழ்கிற அந்த நிமிஷங்கள் ஆன்ட்ரியா மீதுபரிவே ஏற்படுகிறது.. ‘இங்கு இருக்கிற மூன்று ஆம்பளைகளும் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது’ என்று கூறிவிட்டு கமலை இறுக அணைத்துக் கொள்கிற போது, அங்கே துளி கூட காமம் இல்லை என்பதே உண்மை. மற்றபடி ,கமலின் முத்த குசும்புகளும் படத்தில் இளசுகளை சூடேற்றும் விஷயங்கள்! ஷாம்தத்தின் ஒளிப்பதிவு சூப்பர்! ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.படத்தில் தேவையில்லாத இழுவை காட்சிகள் ஏராளம் .வெட்டி எறிந்திருக்கலாம். கதைக்குள் கதை இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்லி போரடிப்பார்களோ! தெரியவில்லை! மொத்தத்தில் குறைகளை விட நிறைகள் அதிகம் இருப்பதால் உத்தமவில்லனை ஒரு முறை பார்த்து விட்டு வரலாம்.
நடிப்பு :கமல் ஹாசன் .ஊர்வசி,பூஜாகுமார்,ஆண்ட்ரியா,கே.பாலசந்தர்,நாசர்,பார்வதி.
கதை,திரைக்கதை ,வசனம் ,கமல்ஹாசன்.
ஒளிப்பதிவு; ஷாம்தத்.
இசை;ஜிப்ரான்.
இயக்கம்;ரமேஷ் அரவிந்த்.