கோலிசோடா பாட்டிலை குலுக்கி உயர தூக்கி வீசி அதை இன்னொரு கோலிசோடா பாட்டிலால் குறி பார்த்து அடித்தால் எப்பேர்ப்பட்ட பட்டாளமும் தெறிச்சி ஓடிடும்! இது அந்த காலத்து அரசியல் கலாட்டா பார்முலா.
தாதா, சாதிய தலைவன், அரசியல் வாதி இந்த மூவரணியை அப்படித்தான் தெறிக்க விட்டிருக்கிறார்கள் கோலி சோடாவின் மூன்று விடலைப் பசங்கள்.
வினோத்துக்கு ஆட்டோவிலிருந்து காருக்கு சொந்தக்காரனாகும் ஆசை.நேர்வழி ஆள். வட்டிக்கு பணம் வாங்க மாட்டார். பாரத் சீனிக்கு ஜில்லா போக்கிரி துறைமுகம் தில்லையிடம் இருந்து விலகி நேர்மையான வழியில் காதலி சுபிக்ஷாவுடன் வாழ்கிற ஆசை. எசக்கி பரத்துக்கு ஹோட்டலில் பரோட்டா தட்டியாவது பேஸ்கட் பால் வீரனாகி லவ்வர் கிருஷ்ணகுருப்புடன் வாழ ஆசை.! இந்த மூவருக்கும் முதுகெலும்பு நடேசன் என்கிற சமுத்திரக்கனி. இவருக்கு கழுத்தெலும்பு தேய்வு! காதல் தோல்வி. சரியான தேர்வு!
ஒரே பளார்.! சமுத்திரக்கனி சாய்ந்தாலும் நிமிர்ந்து உயரம் செல்வது கதைதான்! அடேங்கப்பா கவுதம் வாசுதேவ மேனனின் விசாரணை டாப் டக்கர்! இந்த விசாரணையில்தானே அராஜகர்களின் தடித்த தோல்கள் கிழிபடுகின்றன. வசனம் யாருங்க.! எருமைத் தோல்களை உரித்து உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து தடவியது மாதிரி! ஆனால் காலத்துக்கு ஏற்ற மாதிரி!
,”ஏழ்மையை ஒழிப்பதாக சொல்லிட்டு ஏழையை ஒழிக்கிராணுங்க!”
அந்த பாங்கி அதிகாரியை காய்ச்சி எடுக்கும் காட்சி மட்டும் என்னவாம்!
பாரத் சீனி -சுபிக்ஷா லவ் .லைவ் என்டர்டயின்மென்ட்.துறைமுகம் தில்லையிடம் மறுபடியும் மாட்டிக்கொள்ளக்கூடாதே என்று காதலி துடிப்பதைப்போலத்தான் நாமும் துடிக்கிறோம். சண்டைக்காட்சிகளில் எக்ஸ்ட்ரா எனர்ஜி போட்டிருக்கிறார். ஆனால் செக்ஸ் எனர்ஜி எப்போது என்பது மட்டும் எல்லோருக்கும் எழும் நியாயமான கேள்வி! இயக்குநர் விஜய்மில்டன்தான் பதில் சொல்ல வேண்டும்!
கல்யாணம் நிகழ்ந்த மறு நிமிடமே காவல் நிலையத்தை காலியாக்கும் சாதி தலைவனை அங்கேயே சுட்டுத்தள்ளி கதையை திசை திருப்பினால் என்கிற நியாயமான கோபம் எழுகிறது. .ஆனால் அந்த அராஜகர்கள் மூவருமே ஒரே சாதியில் பழுத்தவர்கள்! ஒருவன் பக்திப் பழமும் கூட ! ஓம் சக்தி! தீபக்கின் எடிட்டிங் ஜெய்சக்தி!
கிளைமாக்ஸ் காட்சி சற்றே நீளம். மூவராலும் அத்தகைய வன்முறைக்கூட்டத்தை காலி பண்ணுவது சாத்தியமா என்கிற கேள்விக்கு இயக்குநர் இப்படி பதில் சொல்லலாம் “ஒரே புல்லட் ஒருத்தன் மேல பட்டாலும் பெருங் கூட்டம் சிதறி ஓடுவதில்லையா?”
சிக்கன் பிரியாணி போட்டு விட்டு ஜீரணிப்பதற்கு ஒரு கோலி சோடா!