அனுமனின் வாலில் தீப்பந்தம் கட்டியதால் இலங்கையில் பேரழிவும் பேரச்சமும் நிலவியதாக சொல்வார்கள்.
அதைப் போலாகி இருக்கிறது மலையாளப் பட உலகில்! அந்த மாநிலத்தின் நடிகர் சங்கத்தில் (அம்மா ) கடுமையான கொந்தளிப்பு கொடுங்கோபம் நிலவுகிறது. இது போதாது என்று நடிகைகள் சார்ந்து இருக்கிற பெண்கள் அமைப்பும் சவுக்கு எடுத்து சுழற்றுகிறது.
சனி பகவானின் தனி வழியில் மோகன்லால் குறுக்கிட்டாரோ என்னவோ ,குடுமியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்தை சார்ந்திராத WCC எனப்படும் பெண்கள் அமைப்பினர் கடிதம் வழியாக நெருப்பைக் கொட்டி இருக்கிறார்கள்.
அமலா,அபிஷா,அர்ச்சனா,தர்ஷனா,திவ்யா,ரஞ்சினி சம்யுக்தா உள்ளிட்ட பலர் அந்த அமைப்பு வழியாக கோபத்தை காட்டி இருக்கிறார்கள்.
“அம்மா சங்கம் அபாயகரமான, பொறுப்பற்ற போக்கில் போகிறது” என்று அவர்கள் பொக்ரான் சோதனையை நடத்தி இருக்கிறார்கள்..
“2017-ல் ஒரு நடிகை தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகர் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தது தன்னாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது ” என்று சொல்லியிருக்கிறார்கள்.
ரேவதி,பத்மபிரியா,பார்வதி உள்ளிட்ட 100 பேர் கையெழுத்திட்டு தனியாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
“நடிகர்களுக்கு இணையான சம்பளம் நடிகைகளுக்கு இல்லை. இப்படியிருக்கிறபோது உறுப்பினர் கட்டணமாக ஒரு லட்சம் கேட்பது என்ன நியாயம்? பெண்களுக்கு எதிரான போக்கு அம்மாவில் இருக்கிறது “என்பது இவர்களின் குற்றச்சாட்டு.
தலைவர் மோகன்லால் சொல்வதெல்லாம் “நாங்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் அல்லர். நடிகை தாக்கப்பட்டதற்கு நாங்களும் கண்டனம் தெரிவித்து எங்களின் கவலையை பதிவு செய்திருக்கிறோம்.அந்த நடிகைக்கு ஆதரவாக அம்மா சங்கம் இருக்கும். பொதுக்குழு கூடி எடுத்த ஜனநாயகரீதியான முடிவுதான் திலீப்பை சேர்த்தது. இங்கு தன்னிச்சையாக யாரும் முடிவு எடுக்க முடியாது “என சொல்லியிருக்கிறார்.