நெடிதுயர்ந்த ,நெருங்கி,நெருங்கி,நின்ற பருமனான மரங்கள்.தேக்கு,சந்தனம்,மத்தி, தோதகத்தி,மூங்கில்,இப்படி விதம் ,விதமாக செழித்து, வளர்ந்து நின்றன.அவைகளின் அகலமான அடிப்பாகம் தெரியாதபடி மறைத்து வளர்ந்திருந்தன புதர்ச் செடிகள். மேடும் பள்ளமுமாய் சீரான வழி இல்லாத நெருக்கமான காடுகளாய்…….
மாதேஸ்வரன் மலை உச்சியிலிருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மேகங்களும் ,மரம்,செடி,கொடிகளும்தான். சில்லென்று உடலைத் தழுவிச்செல்கிற காற்று….எப்போது மழை பெய்யும்,நிற்கும் எனத் தெரியாது. சூரியக்கதிர்கள் பெரும்பாலும் தரையைத் தொடுவதில்லை.அடர்ந்த காடு,வழுக்கலான பாறை, பாதை, கசகசவென ஈரம்.
ஆள் அண்டாக் காடு என்பார்களே!
அதுதான் இது!
மேற்குத் தொடர்ச்சி மலையின் செழுமையான, அழகான பகுதிகள் என்றால் இந்தப்பகுதிகளைத்தான் சொல்லலாம்.கிட்டத்தட்ட 18 ஆயிரம் சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த இயற்கையின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடக்கிறது.
அருவிகளின் அருகில் மந்தை, மந்தையாக யானைகள் மேயும் அழகே அழகு!
வெள்ளைக்காலுறைகள் அணிந்திருக்கின்றன என்று சொல்லக் கூடிய காட்டெருமைகளின் அழகே அழகு!
உண்ட மயக்கத்தில் மரங்களின் வசமான கிளைகளில் கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு உறங்கிக்கிடக்கும் சிறுத்தைகளை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.
அதோ பாருங்கள் அந்த புலியை! காட்டுமானின் கழுத்தைக் கவ்வியபடி போய்க்கொண்டிருக்கிறது.வசதியான இடம் வந்ததும் மானை கீழே போட்டுவிடும்.வயிறைக் கிழித்து குடலையும் மாமிசத்தையும் ரத்தச்சூடு சுவை, மாறும் முன் தின்று மிச்சத்தைப் போட்டு விட்டுப் போய்விடும்.
மனிதன் தப்பித் தவறி இந்த பரந்து விரிந்த வனாந்திரத்துக்குள் நுழைந்து விட்டால் வழி புரியாமல் மாட்டிக்கொள்வான். வடக்கு ,தெற்கு, திசை தெரியாது . வண்டுகளின் பின்னணி இசையில் அவ்வப்போது பிளிறல்,உறுமல்,வேறு! பயந்தே செத்தாலும் செத்து விடுவான்.
பாம்புகள் கடித்து சாவதற்கு நிறைய வாய்ப்புகள், காட்டெருமைகளிடம் சிக்கினால் வேறு ஆபத்தே தேவையில்லை.இதே மாதிரிதான் காட்டுப்பன்றிகளும் மகா மோசமானவை.
மனிதன் தனக்கென கூடு கட்டிக்கொள்ள முடியாது.அத்தகைய வனாந்திரத்தில்தான் வீரப்பன் கொடி கட்டி வாழ்ந்திருக்கிறான். அவனுக்கு கொடிய வன விலங்குகளிடம் பயமில்லை.அவனின் பயமே நாட்டு மனிதர்கள்தான்!
சலசலவெனஓடிக்கொண்டிருக்கும் சின்ன நீரோடைக்கு அருகே சின்ன குகை.கொட்டாவி விட்டது மாதிரி.அதன் மறைவிடத்தில் வீரப்பன் படுத்திருந்தான்.திருமால் பள்ளி கொண்ட மாதிரி! தலையை இடது கை தாங்கி இருந்தது.சற்றுத் தள்ளி சேத்துக்குளி கோவிந்தன்.அருகில் தானியங்கி துப்பாக்கிகள்.
“இனியும் எதுக்கு ரோசனை? பேசாம முத்துவ கண்ணாலம் கட்டிக்கிட்டு கூட்டியாந்திரு.மனச பறி கொடுத்திட்ட.எதுக்கு மருகிட்டு கிடக்கிற?”என்றான் சேத்துக்குளி.
எழுந்து உட்கார்ந்த வீரப்பன் மீசையை திருகிக்கொண்டான்.முகத்தில் சந்தோசம்.சேத்துக்குளியை கூர்ந்து பார்த்தான்.
“என்னத்த அப்படி பாக்கிறே? எம்மனசில வஞ்சகம் எதுவுமில்ல.உனக்கு கண்ணால ஆசை வந்திருச்சு.ஏத்த சோடியையும் பாத்திட்ட.அப்புறம் எதுக்கு தயங்குற?”
“அதுக்கில்லடா. நா மட்டும் காட்டுக்குள்ள ஜாலியா குடும்பம் நடத்துனா,உங்களுக்கல்லாம் கஷ்டமா இருக்காதா?… நாளைக்கு நீயே நினைக்க மாட்டியா?…நம்பள்லாம் உசிரைக் கையில பிடிச்சிக்கிட்டு காட்டுக்குள்ள திரியிற போது இவன் மட்டும் பொஞ்சாதி,குடும்பம்னு ஜாலியா இருக்கானேன்னு நினைக்க மாட்டியா?”….ஆழம் பார்க்கும்வகையில் வார்த்தைகளை விட சேத்துக்குளி துடித்துப்போனான்.
மிச்சம் நாளை.!