“ச்சீய்…..நீயும் ஒரு மனுசனா?” என்று கோபத்துடன் எழுந்தவனை தோள் தொட்டு சமாதானப்படுத்தப் பார்த்தான் வீரப்பன். கைகளை விலக்கி விட்ட சேத்துக்குளி “கேட்டியே…ஒரு வார்த்த… நாண்டுக் கிட்டுபோற மாதிரி! எங்கப்பன் ஆத்தாளுக்குப் பெறகு எல்லாமே நீதான்னு நெனச்சுக்கிட்டு உங்கூடவே கிடக்கிறேன் பாரு…அதுக்கு பரிசு கொடுக்கிறியாக்கும்?”
“அதுக்கில்லடா…உன்னயப் பத்தி எனக்குத் தெரியும் .மத்த பயலுக நெனக்கமாட்டானுகளா…அப்படி நெனச்சிட்டா நம்மக்கிட்ட ஒத்தும இருக்காதே..போயிடும்…அழிஞ்சி போயிருவோம்….அதுக்காகத்தான்யா கேட்டேன்.!”
“எந்த பயலும் அப்படி நெனக்க மாட்டான்.நம்ம க்ரூப்ல இருக்கிற எல்லோரும் நீதான் அப்பன்னு நெனச்சு வாழ்ந்திட்டிருக்கானுங்க! ..ஆத்தா வந்துட்டா ன்னு சந்தோசப் படுவானுங்க.முத்து வந்தா பொங்கிப் போட்டுக்கிட்டு இருக்கும்.அது கையாள சோறு வாங்கிச் சாப்பிடறவனுக்கு பெத்த ஆத்தா இல்லேங்கிற கவலை இருக்காது…வேற மாதிரி எவனும் நெனக்கமாட்டான்.”
“நெனச்சிட்டா?” மனசில கிடக்கிற சந்தேகத்தை எடுத்துப் போட்டான் வீரப்பன்.
“அவன் உசிரோட இருக்க மாட்டான்!”
மறுநொடியே கட்டித் தழுவிய வீரப்பன் “நீ இருக்கிறவரை எமன் என்னை நெருங்கமாட்டான்டா!”என்று உணர்ச்சி வயப்பட்டான்.
தம்பி அர்ச்சுனனை விட சேத்துக்குளி கோவிந்தனிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தான் வீரப்பன்.சேத்துக்குளியின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் நடைமுறைக்கு வராது.
“கண்ணாலத்த எங்க வச்சுக்கலாம்னு நெனக்கிறே?”
“முத்துவோட அப்பனுக்கு என்ன பிடிக்கல.மகளை எனக்கு கட்டித் தரமாட்டான்னு நெனைக்கிறேன்.அதனால மதுரவீரசாமி மாதிரி முத்துவ கடத்திட்டு வந்து கண்ணாலம் பண்ணிக்கணும்.நேரம் காலம் பாத்துக்கிட்டு காலத்த கடத்துறது நல்லதில்ல,அந்த புள்ள மனசு உடஞ்சி போயிடும் .அது ஏதாவது பண்ணிக்கிட்டா அந்தப்பாவமும் வந்து சேரும்.என்ன சொல்ற?”
கடத்தல் திட்டம் சேத்துக்குளிக்கு பிடிக்கவில்லை. பதில் சொல்லவில்லை.
“பேசாம இருந்தா எப்படி? பத்திரிகை அடிச்சு ஊரைக் கூட்டி கண்ணாலம் நடத்தனும்னு நெனைக்கிறியா?”
“ப்சு…!அதில்ல..நான் என்ன மடையனா?”
“பின்ன எதுக்கு ரோசனை?”
“கடத்திட்டு வர்றதை கடைசியா வச்சுக்கிட்டா என்ன? இன்னொரு வாட்டி அவங்க அப்பாரை கேட்டுப்பார்த்திடலாமே?”
“அப்படீங்கிறே? சரி! உன் வார்த்தையும் சரிதான்.நானே போறேன்.மாட்டேன்னு சொல்லிட்டா முத்துவ கையோடு கூட்டிட்டு வந்துடறேன்”!
“போற எடத்தில கோபப்படாதே!முத்துவோட அப்பாரு ஏடாகூடமா பேசினா ஆத்திரப்பட்டு தட்டிராதே! பொண்ண பெத்தவனுக்கு கோவம் வரத்தான் செய்யும்.அனுசரிச்சுப் பேசிப்பாரு! ஒத்துவறேலேன்னா முத்துக்கிட்ட பேசிட்டு கூட்டியாந்திரு!”
வீரப்பனுக்கு புத்தி சொல்லி அனுப்பி வைத்தான் சேத்துக்குளி!
என்ன நடந்தது..நாளை?