அண்ணன் செங்கோடனுக்கு எல்லாம் தெரியும்.
வீட்டில் அவனும் முத்துலட்சுமி மட்டுமே அன்று இருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.! அய்யனும் பாப்பம்மாவும் வயலுக்குப் போயிருந்தார்கள்.
வீரப்பன் வருவான் என்பது அவர்களுக்குத் தெரியாது.எதிர்பார்க்கவும் இல்லை.மின்னல் மாதிரி வந்து மறைந்து விடும் வீரப்பன் அன்று கையில் பூ வெற்றிலை பாக்குடன் வந்து விட்டான்.
காட்டை விட்டு வெளியில் வந்து விட்டால் எங்கேயும் அதிக நேரம் தங்க மாட்டான்.ஆபத்து எந்த பக்கம் இருந்து வரும் ,எந்த வடிவில் வரும் என்பது தெரியாது.காலில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக அன்று பரபரவென காணப்பட்டான்.
அவனைப் பார்த்ததும் முத்துவும் செங்கோடனும் திகைத்துப் போய் நிற்க ,அவளின் கையில் பூவுடன் வெற்றிலைப் பாக்கை வைத்த வீரப்பன் “இந்த தாம்பூலம் மேல சத்யம். உன்னைத் தவிர வேற யாரையும் கண்ணாலம் கட்டிக்க மாட்டேன் “என்று சத்யம் செய்து விட்டு “நீயும் சத்யம் பண்ணு ” என்று முத்துவையும் சத்தியம் செய்ய வைத்தான்.
அவளும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவள் மாதிரி சத்தியம் பண்ணி விட்டாள்.செங்கோடனால் மறுப்பு சொல்ல முடியவில்லைதங்கச்சிக்கு விருப்பம் என்கிறபோது என்ன செய்ய முடியும்?
” மச்சான்!”
செங்கோடன் முதன்முதலாக முறை வைத்து கூப்பிட்டான்.!
“இனி இங்கே தங்கச்சிய விட்டுட்டுப் போயிடாதே !அய்யன் உங்க கண்ணாலத்துக்கு சம்மதிக்க மாட்டாரு.தாம்பூலத்தில் சத்தியம் பண்ணீட்டிக.அதனால கூட்டிட்டு போயிரு.! காட்டுல இருக்கிற கோயில்ல வச்சு கண்ணாலத்த முடிச்சிடுங்க.! வெரசா கிளம்புங்க.” என்று அவர்களை முடுக்கி விட,
இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அவர்களும் சிட்டாக பறந்து மறைந்து விட்டார்கள்.
முதல்நாள் என்ன நடந்தது என்பதை செங்கோடன் சொல்ல சொல்ல அய்யன் தலையை குனிந்துகொண்டே கேட்டுக் கொண்டார்.பாப்பம்மாள் எதுவும் பேசவில்லை.
நாளை வரும்.