சுந்தர், சுவாமிநாதன்,ஆண்டியப்பன்,மாரியப்பன்,குருநாதன்,ஆத்தூர் கொளந்தை ,பெருமாள், கோபாலன் இத்தனை பெரும் சேத்துக்குளி கோவிந்தனுடன் சண்டை போடாத குறை! கத்திக் கொண்டிருந்தார்கள்.
அத்தனை பேரையும் சமாதானப் படுத்துவதற்குள் சேத்துக்குளிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
“அவனுங்களை விடக்கூடாது. இப்பவே தீர்த்துப்புடனும். எச்சக் காசுக்கு துப்பு சொல்றானுங்க. நிறைய காசு கிடைச்சா பொண்டாட்டியையும் விட்டுட்டுப்போயிடுவானுங்க!”என்று கொதிக்கிறான் ஆத்தூர் கொளந்தை.
“நா மட்டும் அவனுங்கள சும்மா விட்ரனும்னா சொல்றேன்? அண்ணன் வரட்டும் ஒரு வார்த்த சொல்லிட்டு பொங்க வச்சிருவோம்”என்று ஆத்திரத்தை அடக்கப் பார்க்கிறான் சேத்துக்குளி .
பொங்கல் விழாவுக்கு இன்னும் 15 நாள்தான் இருந்தது .கோட்டையூர் அய்யணன், குணசேகரன், முத்துக்குமரன், தனபாலன் ,அய்யன்தொரை என்கிற ஐந்து பேரும் போலீசுக்கு தகவல் சொல்கிற இன்பார்மர்கள். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை பொங்கல் நாளன்று வீரப்பன் கடத்த இருப்பதாக இவர்கள் போலீசுக்கு சொல்லி விட்டதால் முக்கியமான வழிகளை மறித்து ரிசர்வ் போலீஸ் முகாம்கள் அமைத்து விட்டது.
இதனால்தான் வீரப்பன் கோஷ்டிக்கு அப்படி ஒரு கொலை வெறி!ஒரு கோடி ரூபாய் வியாபாரம்.முன்பணமும் வாங்கியாகி விட்டது.குறித்த காலத்தில் சரக்குகளை கொடுக்காவிட்டால் நாணயம் இருக்காதே!
வீரப்பன் வந்ததும் ஆளுக்காள் ஆவேசத்தைக்கொட்டித் தீர்த்தனர்.”எதிரிகளை விட துப்புச்சொல்றவனுங்கதான் மோசமான பயலுங்க” என்பது வீரப்பன் மனதில் பதிந்து கிடக்கும் பால பாடம்.
மற்றவர்கள் ஆவேசப்பட்டதைப்போல அவன் ஆத்திரப் படவில்லை! அமைதியுடன் விசாரணை செய்து விவரங்களை தெரிந்து கொண்டான்.
இன்பார்மர்கள் ஐந்து பெரும் ‘தேங்காய்க் கொம்பு பள்ளத்தில்’ கூடியிருப்பதாக தகவல்.
வீரப்பன் வியூகம் அமைத்தான்.
வீரப்பன் தலைமையில் ஒரு குரூப் .
இன்னொரு பிரிவுக்கு சேத்துக்குளி!
காவேரியில் நெஞ்சளவு தண்ணீர்.பள்ளமான பகுதி என்பதால் ஆற்றில் இழுவை இருக்கும்.
அடர்ந்த புதர் ஓரமாக அய்யன்தொரை காலைக்கடனுக்காக உட்கார்ந்திந்தான்.வாயில் சுருட்டு!குணசேகரன்,முத்துக்குமரன், இருவரும் கரை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தார்கள்.கோட்டையூர் அய்யணனும்,தனபாலனும் கருங்குரங்கை நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸ் இன்பார்மர்கள் ஐந்து பேருக்கும் அன்றைய காலை உணவு கருங்குரங்கு!
குணசேகரன்,முத்துக்குமரன் இருவரும் துவட்டியபடி கரை ஏற …….
அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடிக்கும் சப்தமுடன் “ஐயோ” என்ற அலறலும் சேர்ந்து எதிரொலித்தது.
பயந்து எழுந்த அய்யன்தொரை காலை தூக்கி வைத்து ஓடுவதற்குள் தலை சிதறி விழுகிறான்.சேத்துக்குளி குறி வைத்து அடிப்பதில் கில்லாடி!
கோட்டையூர் அய்யணன்,தனபாலன் இருவரும் இருவேறு திசைகளில் ஓடினாலும் குண்டுக்கு தப்பவில்லை.
ஐந்து பேரையும் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி விட்டு கிளம்பி விட்டனர்
மற்றவை நாளை.!