“நெசமாத்தான் சொல்றீயா …மொளகாவா அப்படி சொல்லி அனுப்பி இருக்கிறான்?”
அய்யன்தொரை கொண்டு வந்திருந்த செய்தியை அய்யனால் நம்ப முடியவில்லை. வீரப்பனுக்கும் அய்யனுக்கும் அப்படி ஒரு பகை.
“எதுக்கு நமக்குள்ள குத்து வெட்டு?…சமாதானமாப் போயிடலாம் கொள்ளேகால் ஏரியா உனக்கு,மத்த ஏரியாவெல்லாம் எனக்கு .சம்மதம்னா சொல்லி அனுப்பு.வர்ற பவுர்ணமியில் ஒன்னா சேர்ந்துக்கலாம் “என்று வீரப்பன் சொல்லி அனுப்பிய செய்திதான் சேத்துக்குளி மூலமாக அய்யன்தொரையிடம் சொல்லப்பட்டு அது அய்யனிடம் சேர்ந்திருக்கிறது.
அய்யனால் நமபமுடியவில்லை.சூது இருப்பதாக நினைத்தான்.ஆனால் உடன் இருந்த அய்யன்தொரை,மற்ற மூவரும் அதில் சூது இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்தார்கள்.
“அவனின் லோடை நாம்ப வழிமறிச்சு கொண்டு போனதை அவனால் தடுக்க முடியலியே!அதான் கொள்ளேகால் ஏரியாவை எடுத்துக்க சொல்லிட்டான். “என்றான் தனபாலன்.
“சரிடா,நம்ம முனுசாமி,மொக்கையன் ரெண்டு பேரையும் பொலி போட்டிருக்கானே?”
“அவங்க லோடை வழி மறிச்சு பறிச்சா எப்பிடிண்ணே சும்மா இருப்பானுங்க?”இது குணசேகர்.
“குணசேகர் சொல்றது சரிதாண்ணே! மொளகா இப்ப ரொம்பவும் பயம் கண்டு போயிருக்கான். அதனால் ரெண்டு மனசா இல்லாம ஒரே மனசா சொல்லி அனுப்பிடு. சமாதானமா போயிருவோம்.பஞ்சாயத்து நம்ம ஏரியாவ்லதான் நடக்கணும்.எடக்குப் பண்ணினா வெட்டி சாச்சிரலாம்….. சந்தேகப்படாதே” என்று முத்துக்குமார் சொன்னதும் அய்யன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“சரிடா..சம்மதம்னு மொளகாவுக்கு சொல்லி அனுப்பிச்சிடுங்க”
இந்த ஐந்து பேரும் மொளகா என்று சொன்னது சாட்சாத் வீரப்பனைத் தான்,அவனின் பட்டப் பெயர் தான் மொளகா.
சேத்துக்குளி கொண்டு வந்திருந்த சேதியால் சந்தோசத்தில் வீரப்பனுக்கு தலை கால் புரியவில்லை.பவுர்ணமிக்கு இன்னும் இரண்டே நாள்தான்!
“அஞ்சு கேன்ல சாராயத்தை ரொப்பி வையி.மெளா( மான் ) ரெண்டு பத்தாது. ஊர்க்காரப்பயலுக அத்தனை பேருக்கும் நம்ம சாப்பாடுதான்!அதனால நல்ல மெளாவா போட்டுத்தள்ளிரு .அன்னிக்கி ராத்திரி விழா நம்மோடது!”
“பக்கத்திலிருந்த அர்ச்சுனனுக்கு சந்தேகம். “போலீசுக்காரப் பயலு களுக்கு தெரிஞ்சிட்டா?”
“எப்படி தெரியும்?வாட்சர்லாம் நம்ம ஆளுங்க. நம்மட்ட மாசா மாசம் காசு வாங்குறானுங்க..அதுவும் முத்தட்டி ஏரியாவ்ல எல்லாமே மண் ரோடுதான்!குண்டும் குழியுமா கெடக்கும்.ஜீப்பே வராதுன்னா பாத்துக்க.ராத்திரி நேரமா இருக்கிறதால காட்டுக்குள்ல பூந்து பாலாறு பக்கமா திரும்பிடலாம் கவலையே வேணாம்.ஆனா நம்ம ஆளுங்க ஒரு பயலும் சாராயத்தை தொடவே கூடாது.சொல்லி வையி.எவனாவது குடிச்சிருந்தான்னு தெரிஞ்சிது.பெரிய பூனைக்கு விருந்தாகிடுவானுங்க,”
இருவரும் தலை ஆட்டி வைத்தனர்.
நிறை பவுர்ணமி.ஜனவரி மாதம் 4 ம் தேதி. கிராமத்திலிருந்த ஆண், பெண் ,குழந்தை குட்டிகள் என்று ஆலமரத்தடியில் கூடி விட்டார்கள். அந்த மரம்தான் பஞ்சாயத்து மரம்.ஊர் காக்கும் சாமி என்பதாக மரத்தடியில் இரும்பு சூலம் நட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நல்லது, கெட்டதுக்கு ஊர் அங்கேதான் கூடும்.
அய்யன்,தனபால்,முத்துக்குமார், அய்யன்தொரை, குணசேகரன் .இந்த ஐந்து தலைவர்களும் அவரது ஆட்களும் ஒரு பக்கம்.
வீரப்பன்,அர்ச்சுனன்,சேத்துக்குளி இவர்களது ஆட்கள் எதிர்பக்கமாக!
ஊர்மக்களுக்கு சாராயம், மான் கறி.அய்யனின் ஆட்களில் சிலரும் சாராய மயக்கத்தில்!
சுற்றும் முற்றும் பார்த்த வீரப்பன் கையை உயர்த்தினான். ஊரை பார்த்து பேசினான்.
“இனிமே நமக்குள்ள சண்டை சச்சரவு வேணாம்.காடு நெரம்ப வெளஞ்சு கிடக்கு.சாமி புண்ணியத்தில காட்டு வெளச்சல வச்சு நிம்மதியா வாழ்ந்திட்டுப் போகலாம் அதனால் அய்யன் குரூப்பும் என் குரூப்பும் கை கலக்க கூடாது..”
“மொளகா சொல்றது சரிதான்.இனிமே நமக்குள்ள சண்டை சச்சரவு இருக்காது.ஆலமரத்து சாமி முன்னாடி சத்தியம் செஞ்சிக்குவோம் ” என்று அய்யன் சொல்ல ஜனங்களுக்கு சந்தோசம் தாங்கல!
சூலம் பக்கமாக வீரப்பன் சென்றான். அய்யனும் அவனது குழுவினரும் சென்றார்கள்.
ஊர் வழக்கப்படி ஒரு குழுவினர் காலில் எதிர்க்குழுவினர் விழுந்து கும்பிட வேண்டும்.
“அய்யன்தொரையும் அவனது ஆட்களும் வீரப்பன்,குழுவின் காலில் விழ….!
யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஊரே சிதறி ஓடியது.
ஏன் நாளை?