தயாரிப்பு : பி ஸ்டுடியோஸ்
இயக்கம் : மிஷ்கின்
நடிப்பு : நாகா, பிரயாகா, ராதாரவி……
இசை : அரோல் கொரேலி
ஒளிப்பதிவு : ரவி ராய்
எடிட்டிங் : கோபிநாத்
சாலையில் ஸ்கூட்டரில் வரும் ஐஸ் பேக்டரி முதலாளி (ராதாரவி) யின் மகள் பவானியை (பிரயாகா ) கார் ஒன்று இடித்துத்தள்ளிவிட்டு மறைந்துவிட, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் பிரபல இசையமைப்பாளர்களிடம் வயலின் வாசிக்கும் இளைஞன் நாகா. ஆனால் மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே பிரயாகாவின் உயிர் பிரிந்துவிடுகிறது. சாகும் தருவாயில் நாகாவின் கைகளைப் பிடித்து… ‘அப்பா…’ என்ற வார்த்தையை உதிர்க்கிறார் பிரயாகா. அந்த இறப்பின் சோகத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார் நாகா. இந்நிலையில் , அவரின் வீட்டுக்கே பிசாசாக வந்து விடுகிறார் பிரயாகா. பயத்தில் உறையும் நாகாவும் ,அவனது நண்பர்களும்செய்வதறியாது திகைக்க ,இந்தசமயத்தில் நாகாவின் அம்மாவும் அவ்வீட்டுக்கு வந்து விட அடுத்து நடப்பது என்ன ? பிரயகா ஏன் பிசாசாக ,நாகாவை சுற்றிச் சுற்றி வருகிறார். சாகும்போது நாகாவின் கைகளைப் பிடித்தது ஏன்? பிரயாகாவை காரில் வந்து மோதிச் சென்றது யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு திடுக், திடுக்,திக் ,திக்,திகில் என விடையளிக்கிறது மீதிகதை!
பாலா தயாரிப்பில், மிஸ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு’ என்பதால் பேய்த்தனமான எதிர்பார்ப்பு, அசுரத்தனமாக நம்மை வந்து ஒட்டிக்கொள்ள ,அதே வேகத்துடன் ஆரம்ப காட்சிகளிலேயே நாம் கதைக்குள் போய்விடுகிறோம். முகத்தை மறைக்கும் முடி, அதையும் தாண்டி அவ்வப்போது அவர் வெளிப்படுத்தும் முகபாவனைகள், தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு நாயகன் நாகா கிடைத்திருக்கிறார்.. பார்வையற்றவர்களுக்காக சண்டை போடும் போதும், பிசாசை பார்த்து பயந்து அலறும்போதும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகி பிரயாகாவுக்கு படத்தில் ஒரே ஒரு டயலாக் மட்டுமே. மத்தபடி படம் முழுக்க பிசாசாக வந்துபோயிருக்கிறார் அவ்வளவே. பாசமுள்ள அப்பாவாக ராதாரவி, கண்கலங்க வைத்திருக்கிறார். அற்புதமான நடிப்பு. நடிகவேளின் வாரிசு அல்லவா! நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் கச்சிதம். பேய் என்றாலே பயம், மட்டுமே நம்மிடம் இருக்கிறது. அந்த பயத்தை தாண்டிச் சென்றால் அந்த பேய்க்கும் ஒரு அழகு உண்டு என்பதை மிக அழுத்தமாகவும், நேர்மையாகவும் காட்டியுள்ளார் மிஷ்கின்.ரவிராயின் ஒளிப்பதிவு இருளையும் அழகாக பயமுறுத்தி காட்டியுள்ளது, இதற்கெல்லாம் மேலாக படத்தின் மிக முக்கியமான கைதட்டல்களை அள்ளுவது அறிமுக இசையமைப்பாளர் அரொல் கரோலி தான். .பின்னணி இசையிலும் கலக்குகிறார். கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் எழுதிய ஒரு பாடல் மெய் மறக்க ச் செய்கிறது. ஹீரோ வீட்டில் திருட வருபவனை பிசாசு பயமுறுத்தும் காட்சி. பெண் பேயோட்டும் காட்சி , பயத்துடன் படத்தை ப் பார்க்கும் குழந்தைகளை கை கொட்டி சிரிக்க வைக்கும் கல கல காட்சிகள். ஆனால். கதைக்கு பெரிதாக தேவைப்படாத விஷயங்களான சுரங்கபாதை காட்சிகள், அங்கே பிச்சையெடுக்கும் பார்வையிழந்த மனிதர்கள், சோகத்தை பிழியும் பாடல் என முதல் அரைமணி நேரம் மெதுவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம்.. மிஷ்கினின் வழக்கமான சண்டைக்காட்சி. கதாநாயகியை பறக்க மட்டுமே வைத்துள்ளார். இன்னும் கதாநாயகியை நன்கு பயன்படுத்திருக்கலாமோ என தோன்றுவதை தவிர்த்திருக்கலாம்..எனினும், வழக்கமான பேய்ப் படங்களில் இருந்து புதிய கோணத்தில் பிசாசை காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.ஆனால், ”பேய் ’ படத்துக்குரிய பெரிய தாக்கம் எதையும் ரசிகர்களிடத்தில் இந்த ‘பிசாசு’ ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில் லாஜிக் ஓட்டைகளை எல்லாம் மறந்து விட்டு பாத்தால் இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள’ பாசமுள்ள பிசாசு’.
Rating- 3/5