கலைஞர் கருணாநிதி திமுகவின் தலைவராகி இன்று 50 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்த நிலையில் உடல் நலத்தில் சற்றே சறுக்கல்.
“தமிழகத்தை காப்பாற்ற எழுந்து வா தலைவா” என்கிற குரல் கோபாலபுரத்தில் மட்டுமல்ல ,தமிழகம் முழுவதும் கேட்கிறது. காய்ச்சல், நோய்த் தொற்று காரணமாக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று கோபாலபுரம் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஸ்டாலினைப் பார்த்து நலம் விசாரித்தனர், நேற்று முழுவதும் ஆயிரக்கணக்கான தி.மு.க .தொண்டர்கள் கோபாலபுரத்தையே வலம் வந்த வண்ணம் இருந்தனர். பலர் விம்மியதையும் காண முடிந்தது. நேற்றும் இன்றும் கோபாலபுரம் வழக்கத்தை விட பதட்டமுடன்தான் இருக்கிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ,காங்,தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்பு கொண்டு விசாரித்தனர். கனிமொழியுடன் பேசிய மோடி “எந்த உதவி கேட்டாலும் செய்யத்தயாராக இருப்பதாக “சொல்லி யிருக்கிறார். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நாளை கோபாலபுரம் வருகிறார். இதற்கிடையில் பலவிதமான வதந்திகள் வழக்கம் போல றெக்கை கட்டிப் பறந்தன.
அவரால் முன்னைப் போல சேரில் உட்கார முடியவில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறார். தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வரத் தொடங்கி இருப்பதால் அவரது இல்லத்தை சுற்றி ஆறு இடங்களில் தடுப்புகள் அமைத்திருக்கிறார்கள். போலீசார் வாகனங்களை கோபாலபுரம் நாலாவது தெருவுக்குள் அனுமதிக்கவில்லை.அங்குதான் கலைஞர் வீடு இருக்கிறது. பகலில் கலைஞரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. ஸ்டாலின் கூட இரவில்தான் டாக்டர் அனுமதியுடன் பார்க்க முடிகிறது. மூத்த மகன் அழகிரி தனது மகனுடன் கோபாலபுரம் வந்தார். கலைஞர் மனைவி தயாளு அம்மையாரும் உடல் நலமின்றிதான் இருக்கிறார்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இணையதளம் வழியாக விசாரித்து வருகிறார்கள். தமிழகத் தலைவர்கள் அனைவரும் கலைஞர் இல்லம் வந்து விசாரிக்கிறார்கள். கலைஞருக்கு வயது 95. கட்சித் தலைவராகி இன்றுடன் சரியாக 50 ஆண்டுகள் ஆகிறது. “விரைவில் குணம் பெற்று அவரது சொந்தக்குரலிலேயே நன்றி தெரிவிப்பார்” என்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.