தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய வி.பி..விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.