காவேரி மருத்துவமனையில் ஏழாவது நாளாக சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.நேற்று ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு நேரில் வந்து விசாரித்துள்ளார்.இந்நிலையில்,
கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,
‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், திராவிடர்களின் வீரப்போர் தவப்புதல்வரும் ஆன பெருமரியாதைக்குறிய கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை கூடிய விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சில தினங்களாகச் சிகிச்சை பெற்று வருவதை இந்த நாடே மிகுந்த வேதனையின் உச்சத்தில் எதிர்கொண்டு வருந்துகிறது. கருணாநிதி மக்களுக்காகத் தமிழுக்காக உண்மையான சேவை செய்த ஒரு ஒப்பற்ற தலைவர்.பெரும்பாலும் அவர் நலிந்த மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்குப் பெரிதும் உதவினார்.முதல் அமைச்சராக மற்றும் பல பதவிகளில் பல விதமான நலத்திட்டங்களைத் தமிழக மக்களுக்கு அள்ளித் தந்தவர். ஒரு எழுத்தாளராகத் தமிழ் மற்றும் கலை இலக்கியங்களுக்குச் செய்த அளப்பரிய சேவையால் அவர் கலைஞர் என்று அழைக்கப்பட்டவர். இதனை ஒரு மனதாக நான் பிறர் கேட்டுக் கூறவில்லை. நான் சென்னையில் வசித்த போது கண் கூடாக நேரில் பார்த்து இருக்கிறேன். ஒரு உயர்ந்த மூத்த அரசியல் ஆசானாய், ஒரு எழுத்தாளனாய் நானும் இந்த நாடும் அவருக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளோம்.இப்படி ஒரு தமிழ் இன வீரப்போர் தலைவன் நம்மை சுற்றி நூறாண்டுகள் நலமுடன் இருந்தால் மட்டுமே அவரது அரசியல் மற்றும் இலக்கிய அனுபவங்கள் எட்டு திக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும். நான் மனதார இப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற தலைவர் நம்முடன் நீடுடி பல நூறு ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேன். எனது ஜனசேனா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பாக நான் இருதயபூர்வமாக எனது இருகரம் கூப்பி எல்லாம் வல்ல இறைவனை கலைஞர் அவர்கள் கூடிய விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் பவன் கல்யாண்