எத்தனையோ சிரிப்பு மன்னர்கள் சினிமாவில் வந்து போனாலும் இன்றும் மீம்ஸ் போடுவதற்கு வடிவேலுதான் முன்னால் வந்து நிற்கிறார். அதைப்போல அரசியலில் அவ்வப்போது வெப்பமோ , வெதும்பலோ நிலவும் போது சிரிப்பு மன்னர்களாக வந்து மீம்சுக்கு இரையாகிறவர்கள் செல்லூர் ராஜூ,திண்டுக்கல் சீனிவாசன் இருவர் மட்டுமே! அநியாயத்துக்கு அறிவார்ந்த செய்திகளை அவ்வப்போது கொட்டுவதில் இருவருமே சமர்த்தர்கள். எல்லாம் மறைந்த ஜெ.வின் சிறப்புத் தேர்வுகள்.
பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன்சிங் என்று பொதுக்கூட்டத்தில் பேசியவர் சீனிவாசன்.பாரத ரத்னா எம்.ஜி.ஆர் .என்பதற்குப் பதிலாக பாரதப்பிரதமர் எம்ஜிஆர் என்று எம்.ஜி.ஆர்.க்கே புரமோஷன் கொடுத்தவர் இவர்தான்!எல்லாத்துக்கும் டாப் இன்று வேடசந்தூர் கல்வார்பட்டி அரசு விழாவில் சீனிவாசன் பேசியதுதான்!
“நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பரமத்திவேலூரில் மக்களின் குறைகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.அடுத்து சிறிது நேரத்தில் வேடசந்தூருக்கு மதிய உணவுக்கு வருகிறார்.மாலை புதுக்கோட்டைக்குச் சென்று விடுவார்.அதன் பின்னர் டெல்லியில் போய் உட்கார்ந்து (!) நரசிம்மராவுடன் பேசுவார்” என்றாரே பார்க்கலாம். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மறைந்து எத்தனையோ வருடங்கள் கழிந்தும் அவரை ஜீவனுடன் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்
தமிழக மக்கள் எத்தகைய அறிவு ஜீவியை அமைச்சராக அடைந்திருக்கிறார்கள்.!