திமுக தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பாஜக பிரமுகர்கள் வரவேற்றார்கள். யாருடனும் கை குலுக்காமல் கும்பிட்டவாறே தனது காருக்குச் சென்றார் பிரதமர். ராஜாஜி மண்டபத்துக்கு மோடி வந்தபோது முதலில் அவரை எதிர்கொண்டு அழைத்தவர் டி.ஆர். பாலு. பிரதமருக்கு வழி விட்டு முன்னே சென்ற பாலுவின் முதுகைத் தட்டி தன் பக்கமாக கூப்பிட்டுக்கொண்டு அவருடன் பேசியபடியே சென்றார். தனது வலது பக்கமாக ஒட்டியபடியே வந்த ஒரு பிரமுகரை பின்னால் செல்லும்படி கையினால் ஒதுக்கிவிட்டு நடந்து சென்றார்,
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா ,மத்திய பொன்னார் , ஆகியோரும் பிரதமருடன் சென்றனர். கலைஞருக்கு மலர் வளையம் வைத்து விட்டு ஸ்டாலின் , கனிமொழி ஆகியோருக்கு அனுதாபம் சொல்லிவிட்டு திரும்பிவிட்டார். ஜெ. இறுதிச்சடங்குக்கு வந்திருந்தபோது பிரதமர் மோடி அன்றைய சசிகலா தலையில் கை வைத்து ஆறுதல் சொன்னதுபோல இம்முறை யாருக்கும் அவ்வாறு ஆறுதல் சொல்லவில்லை.
திரை உலகைச்சேர்ந்த எல்லா முன்னணி நடிகர்களுமே ராஜாஜி மண்டபத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டனர்..நேரம் செல்லச்செல்ல கூட்டம் காட்டாறு வெள்ளமென வந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.ஒரு கட்டத்தில் போலீசாரே இல்லாமல் இடம் பெயர்ந்து விட்டது போன்ற நிலை வந்தது.