இயக்கம்,ஒளிப்பதிவு ;மணிகண்டன்.
தயாரிப்பு;வுண்டார்பார் பிலிம்ஸ்,க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி.
நடிகர்கள்;ரமேஷ்,விக்னேஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ்.
இசை;ஜி.வி. பிரகாஷ்.
படத் தொகுப்பு;கிஷோர்.
‘காக்கா முட்டை’.இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் .இப்படம் வெளியாகும் முன்பே முன்பே தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்று இருப்பதால் தியேட்டரின் இருக்கையில் அமர்ந்ததுமே ஒரு வித எதிர்பார்ப்பு நம்மிடையே தொற்றிக்கொள்கிறது சிங்காரச் சென்னையின் கூவத்தின் கரையில் வாழும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு பெரிய காக்கா முட்டை (விக்னேஷ்), சிறிய காக்கா முட்டை (ரமேஷ்) என இரண்டு குழந்தைகள். (இவர்கள், மரத்தில் ஏறி காக்கா முட்டையை எடுத்து சாப்பிடுவதால் இவர்களுக்கு சேரி மக்கள் சூடடிய செல்லப்பெயர் தான் இது! ) சிறிய குற்றத்திற்காக ஐஸ்வர்யாராஜேசின் கணவர் சிறைக்குச் செல்ல, ஐஸ்வர்யா எவர்சில்வர் பாத்திர கம்பெனி ஒன்றில் வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். வருமானம் போதாதால் மகன்களின் படிப்பையும் நிறுத்திவிடுகிறார்., அவர்களும் பிழைப்புக்காக ரயில் தண்டவாளத்தில் சிதறிக்கிடக்கும் நிலக்கரித் துண்டுகளை சேகரித்து கடையில் விற்று அதன் மூலம் கிடைக்கும் சிறிய தொகையை அம்மாவிடம் தருகிறார்கள். இநிலையில் இவர்கள் வாழும் சேரிக்கு அருகில் பீட்சா கடை ஒன்று திறக்கப்படுகிறது. அக்கடையை நடிகர் சிம்பு திறந்து வைக்கும் சேதி அறிந்து சிம்புவை பார்க்கும் ஆசையில் அங்கு செல்கிறார்கள் . அங்கு சிம்பு பீட்சா சாப்பிடுவதை ஆசையாக பார்க்கும் சிறுவர்கள் தாங்களும் பீட்சா சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக தினமும் நிலக்கரியை சேகரித்து அதைவிற்று கிடைத்த 300 ரூபாயை சேர்த்து பீட்சா வாங்க கடைக்குச் சென்றால், அவர்களை உள்ளே விட மறுக்கும் காவலாளி,மற்றும் சூப்பர் வைஸர் ஒரு கட்டத்தில் பெரிய காக்கா முட்டையை அடித்துஉதைத்து கீழே தள்ளி விடுகிறார்.இச் சம்பவத்தை குடிசை பகுதியின் மற்றொரு சிறுவன் தனது செல்ஃபோனில் படம் பிடிக்கிறான். இறுதியில் சிறுவர்களின் பீட்சா சாப்பிடும் ஆசை நிறைவேறியதா? இல்லையா? பெரிய காக்கா முட்டையை அடித்த செல்போன் காட்சி எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் படமே ‘காக்கா முட்டை’!
இதுவரை எத்தனையோ படங்கள் சென்னையின் குப்பத்து பகுதிகளை வெளிச்சம் போட்டு காட்டியிருந்தாலும் இது மாதிரி குப்பத்தின் அழுக்கான பகுதியை வேறு யாரும் இத்தனை அழகாக காட்டிவிட முடியாது! என்பதை அடித்து சொல்லிவிட முடியும்! குலுக்கள் நடனம் இல்லை,குத்து பாடல் இல்லை,கொச்சையான, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, ரவுடிகளின் ரத்தமும் சதையுமாக அடி-தடி, வெட்டுக் குத்து என எதுவும் இல்லை ஒரு எளிய கதையை, இரண்டு சிறுவர்களை கதாநாயகர்களாக நடிக்க வைத்து சென்னை சேரிப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை உண்மையாக பதிவு செய்திருக்கும் இயக்குனர் மணிகண்டனை எத்தனை பாராட்டினாலும் தகும்! கூவம் ஆற்றின் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு அங்கு வாழும் மக்களின் ஆசாபாசங்கள்,அவர்களின் தினசரி வாழ்க்கை, ஆசைகள், குறும்பு, கோபம்,அப்பாவித்தனம், அங்கும் நிலவும் அரசியல் என அத்தனையும் மிக,மிக யதார்த்தமாக படம் பிடித்து நம்மை அந்த சேரிப்பகுதிக்கே அழைத்துச் சென்று விடுகிறார்.இயக்குனர். ஜி.வி.பிரகாஷ் குமாரின் எளிமையான பின்னணி இசை, கதையுடன் பின்னி பிணைந்து இப்படத்தின் பெரும் பலமாகும்! சிறுவர்கள் விக்னேஷ்,ரமேஷ் நடிக்கவில்லை! வாழ்ந்திருக்கிறார்கள். பாட்டி செய்த பீட்சாவை சாப்பிட்டு விட்டு ஐயே! ஆயா, .இது தோசை! என பாட்டியை கலாய்த்து ஓடுவது, பீட்சா கடையை திறந்து வைக்க வரும் சிம்புவை பார்த்து, ‘சிம்பு ரசம் சோறு சாப்பிட மாட்டாரா?’ எனக்கேட்பது, இரவில் தூக்கத்தில் ”மூச்சா” போய்விடும் சின்ன காக்காமுட்டை, யாருக்கும்தெரியாமல் டவுசரை கழற்றி ஒரு பாத்திரத்தில் மூடி வைப்பது சூப்பர் காட்சி! பல படங்களில் ஹீரோவுடன் வித விதமான உடைகளுடன் டூயட் பாடி நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு இந்தப் படத்தின் அம்மா கேரக்டர் கிடைத்து இருப்பது அவரின் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே சொல்லலாம். நியாயமாக இவருக்கும் தேசிய விருது கொடுத்து இருக்க வேண்டும் ‘துலாபாரம் ‘ஊர்வசி சாரதாவை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். ஒவ்வொரு காட்சியிலும் வாழ்ந்திருக்கிறார். இந்த பெண்ணுக்குள் இவ்வளவு திறமையா! சபாஷ் ஐஸ்வர்யா! ரமேஷ் திலக், யோகி பாபு, பீட்சா கடை அதிபராக வரும் பாபு ஆண்டனி, ஆயா பாராட்டப்பட வேண்டியவர். இரயில்வே தொழிலாளியாக வரும் ஜோமல்லூரி, பீட்சா கடை திறந்து வைக்க வரும் சிம்பு என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரின் நடிப்பும் கனக்கச்சிதம்! மறைந்த கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பு பலம்!. மீடியாக்களின் ஆர்வக் கோளாறுகளை கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டுள்ள இயக்குனருக்கு செம தில்!
கடைசியில் சிம்புவுக்கு கிடைக்கும் வரவேற்பை போலவே தங்களுக்கு கிடைக்கும் சகல் மரியாதைகளுடன் கடைக்குள் சென்று பீட்சா சாப்பிட்டு பார்த்து விட்டு, டேய், பீட்சா நல்லாவே இல்லைலடா, என படம் முழுக்க சிறுவர்களின் யதார்த்தமான குறும்புகள் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்து விட்டு வரலாம்! மொத்தத்தில் காக்கா முட்டை, பட்டை தீட்டப்பட்ட கோகினூர் வைரம்!