நடிகரும் ,இயக்குனருமான ஒளிஓவியர் தங்கர்பச்சான் சுதந்திரதினவிழா செய்தியாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருப்பது நம் நாடு. எழுபது
ஆண்டுகளாக விடுதலை நாள் (சுதந்திர தினம்) கொண்டாட்டத்தைக் கொண்டாடி
முடித்து விட்டோம்! எதற்காக நம் முன்னோர்கள் ஆங்கிலேயரிடமிருந்து போராடி
விடுதலை பெற்றுத்தந்தார்கள்? அவ்வாறு அரும்பாடுபட்டு வாங்கிய விடுதலையின்
மூலம் வேண்டியதை அடைந்திருக்கின்றோமா? நம் தலைவர்களின் கனவு
நனவாகியுள்ளதா? அவர்களெல்லாம் இப்பொழுதுள்ள நம் நாட்டையும், நம்
கொண்டாட்டத்தையும் காணக்கூடிய வாய்ப்பு பெற்றால் மகிழ்ச்சி அடைவார்களா?
விடுதலைக்குப் பிறகுதான் குடிக்கும் நீரிலிருந்து, நமக்கு உணவளிக்கும்
மண்ணிலிருந்து, உயிர் வாழத் தேவையான உள்ளிழுக்கும் காற்றிலிருந்து
அனைத்துமே நஞ்சாக மாறிபோயின. ஆட்சி புரிந்தவர்கள், புரிபவர்கள் சரிந்துபோன
தங்களின் வாக்குவங்கியைச் சரிசெய்துகொள்ளவும், மேலும் தங்களின் செல்வாக்கை
வளர்த்துக்கொள்ளவும் கொண்டுவருகிற திட்டங்களால் இந்த மக்களின் எதிர்கால
வாழ்வு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதாகவே இருந்ததன்
விளைவுதானே இந்நிலைக்குக் காரணம்!
அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய், முதலீடு இல்லாமல்,
நட்டத்தைச் சந்திக்காத, மிகப்பெரும் வியாபாரமாக மாறிப்போனது தான்
விடுதலையின் மூலம் நாம் உருவாக்கிக்கொண்ட நம் மக்களாட்சியின் மிகப்பெரும்
சோகம்..அளவுக்கு அதிகமாக கோடி கோடியாகப் பணம் குவிக்க, மற்றவர்களை
மிரட்ட, விரும்பியபடி எல்லாம் குற்றங்களைச் செய்ய, செய்த குற்றங்களில் இருந்து
தப்பித்துக்கொள்ள என இவைகளுக்காகவே பெரும்பாலும் மேலும் மேலும் அரசியல்
கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
தன்னைப் போல தங்களுடன் இருந்த சாதாரணமானவர்கள் இன்று அரசியல்
கட்சிகளில் சேர்ந்து அதனை ஒரு தொழிலாகவே நடத்திப் பணம் குவிப்பதைக் கண்டு,
மனசாட்சிகளை உதறித் தள்ளிவிட்டுத் தாங்களும் வெள்ளை உடை உடுத்தி
வெளிப்படையாகத் தெரிந்தும் தெரியாத மாதிரிச் சட்டைப் பையில் தங்கள்
தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு, கொடியுடன் தொழிலுக்குப் புறப்பட்டு
விடுகிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும்
நடந்துகொண்டிருக்கிற மும்முரமான வியாபாரம்… அரசியல் எனும்
தொழில்மட்டும்தான்!
அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்தத் தொழிலையும் தொடங்கி
விடலாம். எதையும் சாதித்துவிடலாம் என்கிற நிலையைத்தான் இந்தச் சுதந்திரம்
நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை
ஆண்டது போல், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே
இந்தத் தேர்தல் அரசியலால் ஆண்டு கொண்டிருக்கின்றன. இதில் சுதந்திரம் எனச்
சொல்லப்படுகிற விடுதலை என்ன சாதித்துக் கொண்டிருக்கிறது?
நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைப் பேர் மக்களுக்காக உழைப்பதற்காகவே
சென்றிருப்பார்கள் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. அப்பழுக்கற்ற,
தூய்மையான எண்ணத்தோடு மக்களுக்குப் பாடுபடுவது என்ற எண்ணத்தோடு
மட்டுமே உருவாக்கப்பட்ட தேர்தலில், ஒரு ரூபாய் கூடச் செலவழிக்க முடியாத
ஒருவர்… இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ
தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா? இது என்னுடைய கேள்வி மட்டுமே அல்ல;
வாக்குகளைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வோர் இந்தியக் குடிமகனும்
கேட்டுக்கொண்டிருக்கிறான்.
எது எப்படி இருந்தாலும் நாம் நம் விடுதலை நாளைக் கொண்டாடித்தானே ஆக
வேண்டும்?இவ்வாறு அதில் கூறியுள்ளார்.