ஏறத்தாழ நகரத்தின் தொடர்பிலிருந்து துண்டிக்கப் பட்டவர்கள் தான் மேற்குத்தொடர்ச்சி மலை குக்கிராமங்களில் வாழ்கிறவர்கள்.
நடந்தும் சுமந்தும் கழுதைகள் வழியாக பொதிகள் கொண்டு சென்றும் வாழ்கிறவர்கள். குறிப்பாக சூது வாது இல்லாதவர்கள். ஏலக்காய் பறிப்பதுதான் அன்றாடத் தொழில் .ஏழைத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக சி ஐ.டி யூ யூனியனும் பிரதிநிதியும்.
இவர்களிடையில் சொந்தமாக இடம் வாங்கி விவசாயம் செய்கிற ரங்கசாமியும் குடும்பமும்தான் வாழ்வியல் மாந்தர்கள். அற்புதமான படைப்பு.
கதை,திரைக்கதை இயக்கம் லெனின் பாரதியும் இசைஞானி இளையராஜாவும் மொத்தத்தையும் சுமந்திருக்கிறார்கள்.
நகரத்தின் மாசு படியாத சில்லென்ற காற்று, மனிதம் மறவாத ஆண் பெண் , காசுக்கு விலை போகும் தலைவன் , நிலம் வாங்கிய ஏழையின் கனவு ஏலக்காய் மூட்டை சிதறுவது போல சிதறுகிறபோது நாமும் சேர்ந்து கொள்வது ,இயல்பான வாழ்க்கை என மகிழும் போது நாமும் கலந்து கொள்வது நமக்கு புத்தம் புதிய அனுபவம்.
வாழ்வியலில் நகரத்து நச்சுக்காற்று கலக்கும் போது இதுதானா வாழ்க்கை என நொந்து போகிறோமே அதுதான் தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு கிடைக்கும் பாராட்டு.
எவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என பகுத்து எவரை சுட்டிக்காட்டுவது?
கங்காணியை வைய்யும் அந்த கிழவி கூட சிறந்த நடிகைதான்!
சொந்த நிலத்தில் விளைச்சல் கண்டவன் அதே நிலத்தில் காற்றாலைக்கு காவல் காக்கிற நிலைக்கு வருவதும் ,இயற்கை விவசாயம் அழிந்து வீரிய விதை,விஞ்ஞான வளர்ச்சி என பல்கும் போது எவர் நிலை உயர்ந்தது என்பதை சுட்டும் போதும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுதான் வருகிறது.
இந்தப் படத்துக்கு பரிசுகள் வழங்கும் தகுதி மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்கிற படம்தான் மேற்குத்தொடர்ச்சி மலை. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையைப் போல இன்னொரு வாழ்வியல் நிகழ்வை எடுப்பதற்கு எவர்க்கு தைரியம் இருக்கும்? நடிகர்கள் இருப்பார்கள்,ஆனால் உண்மை இருக்காது.