9௦ ஆண்டுகளாக இல்லாத பேய் மழை. பெருஞ் சீற்றம் ,பேரழிவு என இயற்கை கேரளத்தை உருட்டித் தள்ளி உருக் குலைத்து விட்டது. ஆள் சேதம் பொருள் சேதம் என சகல சேதங்களிலும் ருத்ர தாண்டவமாடி இருக்கிறது.
அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட உதவிகளில் தமிழகத்தின் பங்கே பெருமளவு. குறிப்பாக திரைக்கலைஞர்கள் துடித்திருக்கிறார்கள் சிலரைத் தவிர!
சாவின் முனையில் இருப்பவனுக்கு சொட்டுத் தண்ணீர் நாவில் விட்டால் நிம்மதியாகச் சாவான் என்கிற நிலையில் இருந்த மலையாள தேசத்து மக்களுக்கு நாம் செய்திருக்கிற உதவி நன்றியை எதிர்பார்த்து அல்ல.!
அரசியலுக்கு வரப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறவர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். அவரது கட்டளையைத் தாங்கி களப்பணி ஆற்றி இருக்கிற ரசிக மன்றத்தினரை கேரளத்தினர் கொண்டாடி வருகிறார்கள்.
அவர் எதைச்செய்யவேண்டுமோ அதை சரியாகச் செய்திருக்கிறார், மக்களுக்கு நேரடியாகச்சென்றடையும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை தனது ரசிகர் மன்றங்கள் வழியாக செய்திருக்கிறார்.
பாத்திரங்கள், துணிகள், போர்வைகள்,மளிகைப் பொருட்கள் முக்கியமாக மருந்துகள் என அவசரக் காலத்துக்கு தேவைப்படுகிற பொருட்களை லாரிகளில் அனுப்பி வைத்திருக்கிறார்.
இவை யாவையும் தனது அலுவலகத்து ஆட்கள் வழியாக இல்லை. அல்லது படக்குழுவினரது வேலையாட்களோ பங்காற்றவில்லை. எல்லாமே மாவட்ட ரீதியான விஜய் மன்றத்தினர்தான் .
கேரளாவில் பாதிக்கப்பட்ட 3 முக்கிய மாவட்டங்களை சேர்ந்த மன்றத்தினருக்கு தளபதி தனது வங்கிக் கணக்கிலிருந்து தலா 3 லட்சம் வீதம் பணத்தை டிரான்ஸ்பர் பண்ணி இருக்கிறார். இவை தவிர கேரளத்திலுள்ள இதர 14 மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் வீதம் பணம் அனுப்பி இருக்கிறார். தமிழகத்தில் 15 மாவட்ட நிர்வாகிகளுக்கும் தலா ஒரு லட்சம் வீதம் அனுப்பி இருக்கிறார்.
பணம் பெற்றுக் கொண்ட அத்தனை மன்ற நிர்வாகிகளும் என்னென்ன பொருள் வாங்கி இருக்கிறோம் அதற்கான செலவு பில் இவ்வளவு என்பதை போட்டோ எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் . லாரிகளைப் பிடித்து மன்றப் பெயர்களுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச்சென்று அங்கிருக்கிறவர்களின் உதவியுடன் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். எல்லாமே புகைப்படங்களுடன் தலைமைக்கு அனுப்பியாக வேண்டும். இவை தவிர முதல்வர் நிதிக்கும் விஜய் பணம் அனுப்பி வைக்கப்போகிறார்,
இவ்வளவு கச்சிதமாக திட்டமிடலும் அதை கட்டளையாக கருதி மன்றத்தினர் கட்டுப்பாட்டுடன் செயல் படுத்தி இருப்பதும் ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ‘என்பதை நினைவூட்டவில்லையா? இதுதானே களப்பணி! தேர்தல் காலப்பணியும் இதுதானே! காலத்தே செய்த உதவியை மக்களும் மறப்பதில்லையே! ஆக அரசியலுக்குத் தேவையான பிரசாரப் பணியிலும் ,ஆக்கப் பணியிலும் விஜய் ரசிகர் மன்றத்தினர் சிறந்தவர்களாக தேர்வு பெற்றுள்ளனர் என்றே சொல்லலாம்.