‘பாகன்’ படத்தை இயக்கிய அஸ்லம், தன் இணை இயக்குநரும் 15 ஆண்டுகால நண்பனுமான காளிரங்கசாமிக்கு படவாய்ப்பு கொடுத்து தன் பிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இதில், பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ,இதில் கதா நாயகனாக அறிமுகமாகிறார். ‘வழக்கு எண்18/9 ‘ ,’ஆதலால் காதல் செய்வீர்’ படங்களின் நாயகி மணிஷா யாதவ்தான் கதாநாயகி. இப்படம் குறித்து இயக்குனர் காளிரங்கசாமி கூறியதாவது, இது ஒரு ஏழைப் பையன் மற்றும் பெண் சார்ந்த வாழ்க்கை. நிஜமான ஒருவரின் வாழ்வில் நடந்ததையே கதையாக்கியுள்ளேன்.சென்னைதான் கதைக்களம். குறிப்பாக அடித்தட்டு குடிசைப் பகுதியில் கதை நடப்பதால் கூவம் நதிக்கரையோரம்தான் பெரும்பகுதி படப்பதிவு நடந்துள்ளது. பிரபலமான பல்லவன் நகர், சிந்தாதிரிப் பேட்டை குப்பங்களிலும் படமாகியுள்ளது சென்னையில் பல அழுக்கான பகுதிகளும் படத்தில் அழகாக இடம் பெற்றுள்ளன.கதை அழுக்கான மக்கள் பற்றியதாக இருந்தாலும் காட்சிகள் அழுத்தமானதாக இருப்பதால் ரசிக்க வைக்கும்படி இருக்கும். நாயகன் முனிசிபாலிடியில் வேலை பார்ப்பவன். நாயகி வெளியூரில் மலையூரிலிருந்து சென்னைக்கு வந்திருப்பவள்.புதுமணத் தம்பதி இருவரிடையே எழும் ஒரு சிறு பிரச்சினையின் தொடர்ச்சி, வளர்ச்சி, முடிச்சு, அதிர்ச்சி, விளைவு, முடிவு என்ன என்பதே திரைக்கதையின் பயணம். இது ஒரு குடும்பக் கதைதான். ஒரு குப்பையான விஷயத்தை பெரிது படுத்தினால் அது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கொண்டு சென்று நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் கதை. என்கிறார். இப்படத்தின் இசையை, ஜோஷ்வா ஸ்ரீதர் கவனிக்க,மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.