தி.மு.க.வின் முக்கியப் பொதுக்குழுக் கூட்டம் இன்று 28ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
காலையில் இருந்தே அண்ணாசாலையின் அந்தப் பகுதியில் திரளாக கூட்டம் குவியத் தொடங்கி விட்டது .
ஒன்பதரை மணி அளவில் மு.க.ஸ்டாலின் வந்து விட்டார். முன்னதாக கோபாலபுரம் இல்லத்துக்குச்சென்று தாயார் தயாளு அம்மையாரின் வாழ்த்துகளைப் பெற்றார்.
முன் வரிசையில் முன்னணியினருடன் அமர்ந்து விட்டார். துரை.முருகன், தயாநிதி மாறன்,கனிமொழி,பொன்முடி, ராதாரவி,ஜெ.அன்பழகன்,ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
மேடையில் கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பச்சை வண்ண சால்வை அணிந்து அமர்ந்திருந்தார்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,
கலைஞர் உள்ளிட்ட அத்தனை முன்னணியினரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. கலைஞரின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிர் துறந்த 248 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தலா 2 லட்சம் வீதம் உதவித் தொகை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரை பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர். கழக முன்னணியினர் உள்பட முக்கியமான பிரமுகர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இன்றைய நிகழ்ச்சியில் அதிகஅளவில் நேரத்தை அனுதாபத் தீர்மானங்களே எடுத்துக் கொண்டன.
இதன் பின்னர் கழக வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. வருமானமும் செலவும் கோடிகள் அளவிலேயே இருந்தன.
கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முறைப்படி ஸ்டாலின் தேர்வு பெற்றதை அறிவித்தார். மேடைக்குச்சென்று அண்ணா கலைஞர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு அன்பழகனிடம் வந்தார் ஸ்டாலின் .புதிய தலைவரின் கன்னம் தழுவி பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார் அன்பழகன். இதைப் போலவே புதிய பொருளாளர் துரை முருகனும் வாழ்த்துப் பெற்றார்.
வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெடிகள் வெடித்தும் வாத்திய கருவிகளை வாசித்தனர், இதன் பின்னர் பொறுப்பேற்ற இருவரும் பெரியார்,அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச்சென்று அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை நாலரை மணி அளவில் தலைவர் கலைஞர் அமர்ந்திருந்து பணியாற்றிய அறிவாலய அறைக்குச்சென்று பொறுப்பு ஏற்கிறார் ஸ்டாலின்.