நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.. ஒருவர் மீது ஒருவர் புகார்களை அடுக்கி வருகிறார்கள். இந்நிலையில், ஜூலை 15ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு சரத்குமார் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிடுகிறது. .மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். தற்போது ராதாரவி உள்ளிட்ட சரத்குமார் தலைமையிலான அணியினர் தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.அதே சமயம் பொருளாளர் பதவியில் வாகை சந்திரசேகர் திடீரென விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று தொலைகாட்சி ஒன்றுக்கு விஷால் அளித்த பேட்டியில் ,‘நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து நான் களமிறங்கப் போகிறேன்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இந்நிலையில் ,இன்று (ஜூன் 14) ஆட்டோ ஒட்டுநர்கள் சார்பில் நடந்த மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார் விஷால். அப்போது நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷாலிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு விஷால் பதிலளித்து பேசியதாவது,, “நடிகர் சங்க விவகாரத்தைப் பொறுத்தவரையில், எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டும் என்று அறிவித்தால் உடனடியாக போட்டியில் இருந்து ஒதுங்கத் தயாராகவே இருக்கிறோம். எங்களுக்கு தேவை நடிகர் சங்கத்திற்கு ஒரு கட்டிடம் அவ்வளவு தான். ஒரே சங்கத்தில் இருந்து கொண்டு சண்டையிட்டு கொள்வது நல்லதாக இல்லை. நாங்கள் தேவையில்லாம எந்த நடிகர்களுடனும் பிரச்சினை செய்யவில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டவர்கள் கட்டிய சங்கக்கட்டிடத்தை இடித்துவிட்டு மல்டிபிளக்ஸ் கட்ட அனுமதிக்க மாட்டோம். மல்டிபிளக்ஸ் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, நலிவுற்ற நடிகர்களின் நலனை கருத்தில் கொண்டு ,நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டினால் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார். ஜூலை மாதம் 15ம் தேதி நடக்கவுள்ள நடிகர் சங்கத் தேர்தலை நடிகர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் விஷால் தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.