சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘என்ஜிகே’ வரும் தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாததால் , தீபாவளிக்கு வெளியாகாது என இப்படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.அதன் விபரம் வருமாறு ,
‘‘என்ஜிகே திரைப்படம் எங்களின் மிக மதிப்பு வாய்ந்த படைப்பு. படம் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து இப்படத்திற்கு சூர்யாவின் ரசிகர்களும், இயக்குனர் செல்வராகவன் ரசிகர்களும் அதிகளவில் ஆதரவை கொடுத்து வருகிறீர்கள்.உங்கள் அனைவருக்கும் ஒன்றை உறுதியளிக்கிறோம். ‘என்ஜிகே’ ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு படைப்பாக நிச்சயம் இருக்கும். இப்படம் மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மிகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாங்கள் திட்டமிட்டுள்ளதை விட சிறிது கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், ‘என்ஜிகே’ படத்தை தீபாவளிக்குப் பிறகே வெளியிடும் சூழல் உருவாகியுள்ளது.’என்ஜிகே’ வின் புதியவெளியீட்டு தேதி விரைவில் உங்களுக்கு அறிவிக்கப்படும்.தமிழக ரசிகர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்!’’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.